– வருட இறுதியில் நடைபெறும் இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழு அமர்வு அதற்கு மிக முக்கிய படி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு, அதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் நேபாள மக்களுக்கு இடையில் சமய மற்றும் கலாசார ரீதியில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமையும் என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் வலுவாக முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்த நேபாள பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத் துறையில் உறவுகளை மேம்படுத்து குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பலதரப்பு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் உட்பட இலங்கை மற்றும் நேபாளத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.