Home » மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டி நாட்டின் உற்பத்தி செயல்முறைக்குப் பயன்படுத்த விரிவான திட்டம்

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டி நாட்டின் உற்பத்தி செயல்முறைக்குப் பயன்படுத்த விரிவான திட்டம்

– மாற்றுத்திறனாளி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம்

by Rizwan Segu Mohideen
September 20, 2023 9:06 am 0 comment

– சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,

“இந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 4% பேர் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தொழில்நுட்பம் மூலம் அவர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு அரசாங்கமாக, மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அதன்படி, குறிப்பாக மாற்றுத்திறனிகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் அரசாங்கத்தில் தங்கி வாழும் நிலையை மாற்ற வேண்டும். எனவே, அவர்களை சமூக ரீதியாக வலுப்படுத்த அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் உட்பட, அவர்களை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பாடசாலை வசதிகளை வழங்குவதும் அவசியம். மாற்றுத்திறனாளிகள் என்று அவர்களை வேறுபடுத்திப் பார்க்காமல் ஏனையவர்களுடன் இணைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சைகை மொழிச் சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். எனவே இந்த மொழியை அனைவராலும் அடையாளம் காணக் கூடிய வகையிலும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் தொடர்பாடல்களை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் செயலகம் மூலமாக, சைகை மொழி சட்ட மூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாற்றுத்திறனாளிகளுக்காக சர்வதேச அளவிலான சுற்றுலா நிகழ்ச்சியொன்றை டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பில் ஆரம்பித்து கண்டி வரை விசேட புகையிரதம் மூலம் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அளுத்கம கடற்கரைப் பகுதியில் விசேட கலாசார நிகழ்ச்சிகள், ஒரு நாள் செயலமர்வுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விசேடமாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றார். வழமையான சமூக நலன்புரி நன்மைகளுக்கு மேலதிகமாக, வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித்தொகையின் கீழ் இதுவரை வழங்கப்பட்டு வந்த 10,000 ரூபா உதவித்தொகை இந்த ஆண்டு முதல் 20,000 ரூபாயாக அதிகரிக்கவும், சுயதொழில் உதவியாக வழங்கப்பட்ட இருபத்தைந்தாயிரம் ரூபா கொடுப்பனவை நாற்பத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.150,000 ரூபா வீடமைப்புக் கொடுப்பனவு 250,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருக்கான நலன்கள் மற்றும் சலுகைகளை அதிகரிப்பதற்கு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படக்கூடாது. அவர்களும் சமூகத்தில் சமமாக பழகுவதற்குத் தேவையான சூழலைத் தயார் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அரச சேவை மற்றும் தனியார் சேவையில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் தேவை.

நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு அவர்களையும் பங்கேற்கச் செய்ய முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக வலுவடைந்து நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x