140க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 78ஆவது ஐ.நா பொதுச் சபை கூட்டம் நியூயோர்க் நகரில் நேற்று (18) ஆரம்பமானது.
எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைனிய போர் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்காக மாற்றம் மற்றும் வேகமான செயற்பாடுகளுக்கான உலகத் தலைவர்களுக்கு வழிகாட்டலை வழங்கும் நோக்கில் பேண்தகு அபிவிருத்தி இலக்கை முன்வைத்து இம்முறை கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை ஒட்டி பல நாடுகளும் முக்கிய இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளன.
இதில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டு அவர் பொதுச் சபை கூட்டத்தில் வீடியோ திரை மூலம் தோன்றியே உரையாற்றி இருந்தார். அவர் வரும் வியாழக்கிழமை (21) வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்திக்கவுள்ளார்.
எனினும் வல்லரசு நாடுகளுக்கு இடையில் நிலவும் முறுகல்களுக்கு இந்த பொதுச் சபை கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சபை கூட்ட அறையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டி அதிகரித்து வருவதாக சுவிஸ் நாட்டு தூதுவர் பஸ்கவே பரிஸ்வில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் நாடுகள் அரசியலில் இருந்து விலகி மனித உரிமை விவகாரத்தில் அவதானம் செலுத்தும்படி மனித உரிமை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.