சிட்னி பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது தொடர்பில் சட்டவிரோத செயற்பாடுகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று (18) நீதிமன்றத்தின் முன் தெரிவித்துள்ளார்.
சிட்னி நகரின் டவுனிங் சென்டர் மாட்ட நீதிமன்றத்தில் குணதிலக்க மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. இதில் தனுஷ்க குணதிலக்க மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணும் தோன்றியுள்ளார்.
குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபோதும் அதில் 03 குற்றச்சாட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மாத்திரம் அவர் மீது தொடர்ந்து நீடிக்கிறது.
இதில் பாலியல் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் பெண், தான் உயிருக்கு பயந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆணுறை அணியாமல் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தாம் ஏமாற்றப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெண், அந்தத் தருணத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் சென்றபோது குணதிலக்க மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நீதிபதி சாரா ஹுக்கட் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக குணதிலக்க, அடையாளம் தெரியாத பெண் ஒருவருடனேயே வருகை தந்திருந்தார். அது அவரது புதிய காதலி என்று நம்பப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை நான்கு நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிட்னி நகரில் சிக்கி இருக்கும் குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளார். சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பத்தில் அவருக்கு கட்டுப்பாடு இருந்தபோதும் அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.