ஆசிய கிண்ணத் தொடரை மழைக்கு மத்தியில் தடங்கல் இன்றி நடத்த உதவிய மைதான ஊழியர்களுக்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் 50,000 அமெரிக்கா டொலர்களான இலங்கை நாணய மதிப்பில் ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட ஊக்கத் தொகையை அளித்துள்ளனர்.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜும் அந்த விருதுக்காக கிடைத்த 5,000 டொலர் பரிசுத் தொகையையும் மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார்.
இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலேயே கடந்த மூன்று வாரங்களாக ஆசிய கிண்ண போட்டிகளின் பெரும்பாலான ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.
இதில் மழை குறுக்கிடும்போது சுமார 100 பேர் அளவான மைதான ஊழியர்கள் மைதானத்தை மூடுவது மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதில் விரைந்து செயற்பட்டது போட்டிகளில் ஆடும் அணிகள், ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் பாராட்டை பெற்றது.
“கிரிக்கெட்டின் மறைமுகமான நாயகர்களுக்கு பாராட்டுகள்” என்று ஆசிய கிரிக்கெட் கெளன்சில் தலைவர் ஜெய் ஷா கடந்த ஞாயிறன்று ட்விட்டரில் தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் பாராட்டினார்.
மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஊக்கத் தொகை கொழும்பு மற்றும் கண்டி மைதான ஊழிர்களுக்கு இடையே பகிரப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்தார்.
இந்தப் பணம் குறிப்பிடத்தக்க ஊழியர்களிடையே பகிரப்படுகின்றபோதும் அந்தத் தொகை கணிசமானதாக அமையவுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான மைதான தயாரிப்பு அதிகாரி கொட்பி தாபரேரா இந்த ஊக்கத் தொகையை ஜெய் ஷாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.