புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார் . அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும் , மக்களைப் பாவம் , தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர்.
அவர்களது வாழ்வு மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர்” என்ற பெயரையே தமதாக்கிக் கொண்டனர்.
இவ்வாறு தொடங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் பாப்பரசர் 7ஆம் பத்திநாதர், நாடு கடத்தப்பட்டதிலிருந்து மீளவும், உரோமை நகர் வந்தடைந்தமைக்கு நன்றியாக வியாகுல அன்னைக்கு விழா கொண்டாடும்படி அறிவித்தார்
வியாகுல அன்னை 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் சிலுவையருகில் நின்று இயேசுவின் துன்பத்தில் பங்கேற்றார். இன்றைய நவீன கால சிலுவைகளாகிய வறுமை, பிணி, அறியாமை, வன்முறை, அடக்குமுறை, இயற்கையை அழித்தல், பண்பாட்டுச் சீரழிவு, தேவையற்ற கலாச்சார மாற்றம் போன்ற சிலுவைகளில் அன்றாடம் மக்கள் அறையப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே இத்தகைய சிலுவைகளிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். இதுவே வீரத்தாயாம் வியாகுல அன்னைக்கு நாம் செய்யும் நன்றியாகும்
நம் அன்னை தன் அன்பு மகனின் பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள். துணை மீட்பராக விளங்கிய நம் தாய் தன் மகனின் பாடுகளில் தனது மாசுமருவற்ற தூய இருதயத்தை அடித்து நொறுக்கி செயலிழக்க செய்வது போன்ற வேதனையை அனுபவித்தார்.
இவ்வாறு வானவனின் வார்த்தைக்கு ‘ஆகட்டும்’ என, தன்னைக் கையளித்த நாள் முதல் நம் தாய் அனுபவித்த வியாகுலங்கள் பற்பல. என்றாலும் நம் தாயாம் திருச்சபை அவற்றில் ஏழு வியாகுலங்களைப் பற்றி தியானிக்க அழைக்கிறது
முதல் வியாகுலம்சிமியோனின் இறைவாக்கு
லூக் 2: 25 முதல் 35
இந்த முதல் வியாகுலத்தில் அன்னை மரியாள் தன் குழந்தையை யூத பாரம்பரியப்படி கோவிலில் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார் .அங்கே பல ஆண்டுகளாக வாக்களிக்கப்பட்ட மீட்பராகிய மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த முதியவர் குழந்தையைக் கையில் எடுத்து ” இதோ இக்குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகத் திகழும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் விளங்கும் ” என்றார் . மேலும் அதன் தாயாகிய மரியாவைப் பார்த்து ” உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவும் ” என்றார்.
அது ஒரு கொடுமையான வாழ்த்து! இதுவரை எந்தத் தாயும் தன் மகனைப் பற்றி முதன் முதலில் கேட்டிராத வாழ்த்து இது . இன்று குழந்தை பிறந்தவுடன் கூடும் உறவுகள் உன் மகன் நன்கு படிப்பான் ,பெரிய ஆளாக வருவான். உன் குடும்பப் பெயரை சிறக்கச் செய்வான் போன்ற வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சூழலில் இப்படியும் ஒரு வாழ்த்து .
இறைவனால் வாக்களிக்கப்பட்ட தன் மகனுக்கும் அவரால் தனக்கும் நேர இருக்கும் கொடுமையை அறிந்தும் அன்னை பதறவில்லை.. காரணம் , எல்லாம் இறை திருவுளம் என்று ஏற்கும் மனப்பக்குவமாகும் இந்தத் துணிவு நமக்கும் வாய்க்கப்பெற ஜெபிப்போம்
இரண்டாம் வியாகுலம்குழந்தையுடன் எகிப்துக்கு தப்பி ஓடுதல்
மத் 2:13,14
இரண்டாம் வியாகுலத்தில் மரியாள் , தன் மகன் இயேசுவைக் கொல்லத் திட்டமிட்ட ஏரோதுக்குப் பயந்து , வானவரின் வழிகாட்டுதலின் பேரில் எகிப்துக்குத் தப்பியோடி அங்கே வாழ்கின்றார். எங்கும் இருள், தெரியாத முகம் , அறியாத மொழி, புரியாத கலாச்சாரம் என எல்லாமே புதிது.
உணவுக்கு என்ன வழி, தங்க இடத்திற்கு என்ன செய்வது யாரிடம் உதவி கேட்பது என எதுவுமே தெரியாதவர்களாய் முன்பு தன் இனத்து மக்களை தன் வீட்டு மாட்டிலும் கேவலமாக நடத்திய மக்கள் மத்தியில் வாழ்ந்து அனுபவப்படுகின்றார். . யூத மக்களின் அடிமை வீடு என அழைக்கப்பட்ட எகிப்தில் யூத மக்களுக்கு உரிமை வாழ்வை அளிக்க கடவுளால் கொடுக்கப்பட்ட மகன் வருகிறார் . இந்தத் துயர் அன்னையை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும்
மூன்றாம் வியாகுலம்
இயேசு காணாமல் போதல்
லூக் 2: 43,44
திருவிழாக் காலங்களில் குழந்தைகள் தாய் தந்தையை விட்டுப் பிரிந்து செல்வதும் பின்னர் நீண்ட தேடலுக்குப் பின் பிள்ளைகளைக் கண்டடைந்து மகிழ்ச்சி கொள்வதும் நம் அனுபவத்தை ஒத்தது. இதோ இங்கே ஒவ்வோர் யூதக் குழந்தையும் 12 வயது நடக்கின்ற போது எருசலேம் ஆலயம் சென்று காணிக்கை செலுத்தி மறைநூலை வாசிக்கும் தகுதி பெறுகின்றனர்
இந்த மதச் சடங்கை நிறைவேற்றவே இயேசுவின் பெற்றோர் இயேசுவைக் கோவிலுக்கு அழைத்து வந்தனர். சடங்குகள் முடிந்து வீட்டுக்குச் செல்ல முற்படும்போது இயேசுவைக் காணவில்லை.
“கடவுள் வாக்களித்த திருமகன்
உலகை மீட்க வந்த இரட்சகன்
தூய ஆவியால் பிறந்த திருமகனை”
காணாமல் போக விட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்வு ஒரு புறம் , பிள்ளைப் பாசம் மறுபுறமுமாக பிரிந்த மகன் கிடைப்பானா என்ற ஏக்கத்தோடு கண்ணில் படும் குழந்தைகள் அனைத்தும் தன் மகனோ என்ற பிரமை. குழப்பத்தோடு நம் தாய் தன் நிலை மறந்து தவிப்பதைத் தியானித்து எந்த நிலையிலும் இயேசுவை விட்டுப் பிரிந்து போகாமலிருக்க மன்றாடுவோம்
நான்காம் வியாகுலம்
இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்
லூக் 23:27
இந்தக் கொடூரச் செயலைக் கண்ணுற்ற நம் தாய் எங்கோ, யாருக்கோ கிடைக்க வேண்டிய தண்டனை இன்று தன் ஒரே மகனுக்கு , குற்றமற்றவருக்குக் கிடைத்திருப்பதைக் கண்டு வருத்தம் மேலிட கலங்கி நிற்கிறார் . இது அன்னையின் மனதை உடைத்து நொறுக்குவது போன்ற வேதனையைத் தந்தது.
30 ஆண்டுகளாக கண்ணுக்குள் கண்ணாகப் பொத்திப் பொத்தி வளர்த்த மகன் இந்த மூன்று ஆண்டுப் பணி வாழ்வால், விரோதியாக, வேண்டாதவராக, எதிர்க்கப்பட வேண்டியவராக, ஒழித்துக் கட்டப்பட வேண்டியவராகப் பார்க்கப்படுவதைக் கண்டு குமுறுகிறது அன்னையின் உள்ளம்.
நாதியற்று, நையப் புடைக்கப்பட்டு, உடல் முழுதும் காயங்களோடு தள்ளாடி தூக்க முடியாத பாரச் சிலுவையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு அன்னை அனுபவித்த துயரைத் தியானிப்போம்
ஐந்தாம் வியாகுலம்
இயேசுவின் சிலுவை அடியில் அன்னை யோவா 19:41,42
முதலும் முடிவுமானவர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே
என்று கூறிய இறை மகன் மூன்று ஆணிகளுக்கு மத்தியில் முடக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறார் மரியாள். இறுதியாகத் தன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் தன் தாயை வாரிக் கொடுக்கிறார் இயேசு. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை இறுதிவரைக் காத்த இயேசு இந்த நேரத்திலும் தன் தாயை அவர்களுக்குத் தாயாக, சிறந்த வழிகாட்டியாக,”அம்மா, இவர்களைக் கவனித்துக் கொள்” என்ற அர்த்தத்தில் “இதோ உம் மக்கள்” என்கிறார்
ஆறாம் வியாகுலம்
மாதாவின் மடியில் மரித்த மகன்
யோவா 19:40
தாலாட்டி வளர்த்த தங்க மகன் சீராட்டி வளர்த்த சிறந்த மகன் பாராட்டி வளர்த்த பாச மகனின் உடல் உயிரற்றுக் கிடப்பதை உற்று நோக்கி மடியில் தாங்கி இருக்கும் அன்னையின் மனத்துயர் சிறு குழந்தையாய் இயேசு இருந்தபோது தூங்க வைப்பதற்காகத் தாங்கிய மடி இன்று தாங்குகிறது 33 வயது இளைஞனின் உயிரற்ற உடலை.” அம்மா, என் பணியை முடித்து விட்டேன், செல்லவா?” என்று கேட்பது போன்ற உணர்வு அன்னைக்கு. உள்ளம் நொருங்குண்டவராக இனி யாருக்காக வாழ வேண்டும், எனக்கென்று யார் இருக்கிறார்கள் எனப் பற்பல கேள்விகள் உள்ளத்தைக் குத்த மௌனியாகிப் போனார். அன்று எருசலேம் ஆலயத்தில் உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சீமோன் சொன்னாரே; அந்த அம்பு இத்தகைய கொடுமையானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை எனத் திகில் கொண்டவராக இருக்கும் அன்னை.
ஏழாம் வியாகுலம்
இயேசுவை அடக்கம் செய்த பின் அன்னை அனுபவித்த துயரம்
யோவா 19:41,42
இல்லாமை இயலாமை ஆக அனைத்திலும் பெரிய கொடுமை தனிமை ‘ எனக்கென்று யாருமில்லை சொந்தம் என்று சொல்ல ஒருவரும் இல்லை என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லை’ என்ற தனிமைத் துயரை ஒரு நேரமாவது அனுபவித்தவர்கள் மட்டுமே அன்னையின் இந்த ஏழாம் வியாகுலத்தைப் புரிந்து கொள்ள இயலும்
யாருக்காக ஆகட்டும் என்றார்களோ, யாருக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்தார்களோ, யாருக்காக வாழ்க்கையின் அத்தனை இடர்களைச் சமாளித்தார்களோ அவரே இன்று இல்லை என்ற போது இனி ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் மிஞ்சும். அகன்ற பாலைவனம் , எங்கும் இருள் என வெறுமை மட்டுமே மனதை நிறைத்து நிற்கும் சூழலில் ஓர் அகல் விளக்காகத் தனித்து இருக்கும் அன்னை.
அருட்சகோதரி ஜெபமணி