Friday, September 29, 2023
Home » மன்னிப்பின் வழி மன்னிப்பு

மன்னிப்பின் வழி மன்னிப்பு

-ஆண்டவர் இயேசு கற்றுத் தரும் பாடம்

by sachintha
September 19, 2023 6:35 am 0 comment

கிறிஸ்தவம் மன்னிப்பு மற்றும் அன்பு எனும் அடித்தளத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஞாயிறு வழிபாடுகள் மன்னிப்பின் மகத்துவத்தை வலியுறுத்துகின்றன.

மத்தேயு நற்செய்தியில் காணப்படும் குழுமப் பொழிவிலிருந்து அன்றைய நற்செய்தி வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.

குழுமத்தில் தமக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருரை எத்தனை முறை மன்னிப்பது என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது.

யூத மரபில் ஏழு என்பது நிறைவின் அடையாளம் மட்டுமல்ல தாராள உள்ளத்தின் அடையாளமும் கூட.

இயேசு தன் சீடர்களுக்கு அது தொடர்பில் சிறந்த பாடத்தைக் கற்பிக்கின்றார்.

‘என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?’ எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, ‘ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை’ என்கிறார்.

மேலும், அன்றைய நற்செய்தியில் மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவனின் எடுத்துக்காட்டையும் இயேசு முன்வைக்கின்றார்.

பணியாளன் ஒருவன் தன் அரசனிடம் பெற்றுக் கொண்ட ஏறக்குயை 510 கோடி ரூபா கடனுக்கு மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளன் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபா கடனை மன்னிக்க மறுக்கின்றான்.

நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சக பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் … என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். என்பதாக இயேசு கூறுகிறார்.

இதில் முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொடக்க நூல் 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார்.

இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம்.

இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால்.22ஆம் நாள் எந்தவொருவரும் எழுப்பாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன்.

இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம்.

ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது.

இந்த பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார்.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார்.

எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்.

இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!

இயேசு வழங்கும் உவமையில் அரசர் தன் பணியாளரை மன்னிக்கின்றார். ஆனால், அந்தப் பணியாள் தன் சகபணியாளை மன்னிக்க மறுக்கின்றார். தான் மன்னிக்கப்பட்டதை மறக்கின்றார். அவருடைய மன்னிக்காத செயல் அவருக்கு எதிராகத் திரும்புகிறது.

ஏன் அந்தப் பணியாளரால் மன்னிக்க இயலவில்லை? இரக்கம் என்பதை மறந்து நீதி என்ற தளத்தில் செயலாற்றினான் அவன்.

எனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருக்கு நான் தீங்கிழைப்பது நீதியே. ஆனால், இரக்கம் என்பது நீதியைத் தாண்டுகிறது.

அரசரைப் போல இருக்க வாய்ப்புக் கிடைத்தும், அந்தப் பணியாளன் ஒரு பணியாளனாகவே இருக்க முற்பட்டான். அரச நிலைக்கு உயர்ந்தால், நம் எண்ணங்கள் உயர்ந்தால் மன்னிப்பு நம் இரண்டாம் இயல்பாகிவிடும்.

மன்னிக்க இயலாதவர்களுக்கு மறுக்கப்படுகிற ஐந்து விடயங்கள் பற்றிப் பேசுகிறது விவிலியம்:

மன்னிக்காதவர்களின் இறைவேண்டல் கேட்கப்படுவதில்லை ( மத் 11:24).

மன்னிக்காதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை (சீஞா 28:1).

மன்னிக்காதவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை ( யாக் 2:13).

மன்னிக்காதவர்களின் நோய்கள் குணமாவதில்லை (சீஞா 28:3, நீமொ 17:22).

மன்னிக்காதவர்களின் பலிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ( மத் 5:23-24).

மன்னிக்கும் வழக்கத்தை நமது வாழ்விலும் தொடர்ச்சியாக கடைபிடிப்போம். ஆண்டவர் நம்மை மன்னிப்பது போல நாமும் எமக்கு குற்றம் இழைத்தவர்களை தொடர்ந்தும் மன்னிப்போம்.

தினமும் நாம் செபிக்கும் இயேசு கற்றுத்தந்த பரலோக செபத்தை எமது வாழ்வாக்குவோம்.

அருட்பணி

யேசு கருணாநிதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT