பைத்துல் மால் நிதியத்தின் 66 ஆவது வருடாந்த மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
நிதியத்தின் 2023/2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் – ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இல்யாஸ், உபதலைவர் – எம்.எஸ். பௌசுல் ஹக், செயலாளர் – ஏ.என். நஸ்வி ரஹ்மான், பொருளாளர் – ஏ. பெரோஸ் மூன், உதவிச் செயலாளர் – எப்.எம். அஸாப் கான்.
செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஆர். ரழீம், எம்.ஏ.எம்.நஸ்ரின், ஏ. பஸால் இஸ்ஸடீன், எம். றுஸ்தி தஹ்லான், எப். ஐ. அன்வர், ெடாக்டர் எம்.ஏ. ஸெய்னுடீன், எம்.எச்.எம்.நஸார், முகைதீன் காதர், சர்ஹான் மூஷீன், மிஃராஜ் டீ சாலி, சுரைஸா ஹாஷிம், றுமைஸ் முஹைதீன், இஷாக் ஹனீபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
57 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் முதலாவது முஸ்லிம் சபாநாயகரான எச்.எஸ். இஸ்மாயிலின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட ஓர் அமைப்பே பைத்துல் மால் நிதியமாகும்.
பைத்துல் மால் நிதியம் கல்வி, தொழில் முயற்சி, பொதுநிவாரணம் ஆகிய துறைகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றது.
பைத்துல் மால் நிதியம் அதன் வரவு-செலவுத் திட்டத்தில் கூடுதலான கவனத்தை வறிய மற்றும் தேவைப்பட்டோரது க.பொ.த. உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. இத் திட்டத்தின் கீழ் வருடாந்தம் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்ற பைதுல்மால் நிறுவனம், அதன் கிராமப்புற மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்களினூடாக பல பாரிய சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
பிரதேசத்திலுள்ள ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றது. வருமானம் ஈட்டலுடன் தொடர்புபட்ட சுயதொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது முக்கியமான ஓர் இலக்காக இருப்பதுடன், பயனாளிகளின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் உத்தரவாதம் வழங்குகின்றது.
நாடளாவிய ரீதியில் ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கும் தேவையான கருவிகளை வழங்குவதும் பைதுல்மால் நிறுவனத்தின் முக்கிய பணியாக உள்ளது.
பைத்துல் மால் நிதியம் கிராமங்களில் நீர்த்தேவைகளை நிறைவேற்றுவதற்காக குழாய்க் கிணறுகளையும் நிர்மாணித்து வருகின்றது.
விதவைகள், ஆதரவர்றோருக்கும் மற்றும் மருத்துவத் தேவையுடையோருக்கும் மாதாந்தம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
பைத்துல் மால் நிதியத்தின் இந்தப் பணிகளில் பங்குபற்ற விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் நிதியத்தின் செயலாளருடன் 0777630923 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு நிதியத்தின் செயலாளர் நஸ்வி ரஹ்மான் கேட்டுள்ளார். (எம்.எஸ்.எம்.ஸாகிர்)