நாட்டில் மேல் மாகாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. அதன் விளைவாக தாழ்நிலங்களிலும் நீர் தேங்கங்கக் கூடிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சுற்றாடலில் ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்தப்படாது குவிந்து காணப்படும் நீர் தேங்கக்கூடிய திண்மக்கழிவுப் பொருட்களிலும் தெளிந்தநீர் தேங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதேநேரம் கடும் வரட்சிக் காலநிலையைத் தொடர்ந்து மழைக் காலநிலை ஆரம்பித்துள்ளதோடு, நுளம்புகளின் பெருக்கத்திலும் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலைமை குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விஷேட கவனம் செலுத்தியுள்ளது.
ஏனெனில் மழையுடன் கூடிய காலநிலையுடன் சேர்த்து நுளம்புகள் பல்கிப் பெருகுவதும், டெங்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமடைவதும் அண்மைக் காலமாக வழக்கமாகியுள்ளது.
டெங்கானது ஒரு வைரஸ் நுண்ணுயிர் ஆகும். இந்நுண்ணுயிரை நுளம்பில் காணப்படும் ஒரு வகை இனமே காவிப்பரப்பும் பண்பைக் கொண்டிருக்கின்றது. அதுதான் ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளாகும். இவ்வின நுளம்புகள் பெரும்பாலும் மழையுடன் சேர்த்து பல்கிப் பெருகக் கூடியன.
அதாவது டெங்கு வைரஸைக் காவிப் பரப்பும் இந்நுளம்புகள் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டுள்ளன. அதன் காரணத்தினால் தற்போதைய மழைக் காலநிலையும் மழை நீர் தேங்குவதற்கு சாதமாக சுற்றாடலில் காணப்படும் திண்மக் கழிவுப்பொருட்களும் இவற்றின் பெருக்கத்திற்கு துணைபோகக் கூடியனவாக காணப்படுகின்றன. அதனால்தான் நுளம்புகள் பெருகுவதற்கு சாதமான முறையில் சுற்றாடலை வைத்திருக்க வேண்டாம் என சுகாதாரத் தரப்பினர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அவர்களது கோரிக்கைப்படி வீட்டையும் சுற்றாடலையும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்க முடியாதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சுற்றாடலில் காணப்படும் கைவிடப்பட்ட சிரட்டைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், பொலித்தீன், உடைந்த மட்பாண்டங்கள் உள்ளிட்ட மழைநீர் தேங்கக்கூடிய அனைத்து திண்மக் கழிவுப்பொருட்களையும் முறையாகவும் சீராகவும் அப்புறப்படுத்துவது இன்றியமையாததாகும். அத்தோடு நீர் தேங்க முடியாத வகையில் சுற்றாடலை உலர்நிலையில் வைத்திருப்பதிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்க வாய்ப்பு இராது.
இது இவ்வின நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்பை முழுமையாகத் தவிர்த்து விடும். இவ்விதமான நடவடிக்கைகளின் மூலம் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ்வின நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது இவ்வைரஸின் தாக்கமும் பாதிப்புக்களும் கட்டுப்பாட்டு நிலையை அடைந்து விடும். அதாவது டெங்கு வைரஸைக் காவிப் பரப்பும் செயலை ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகள்தான் மேற்கொள்ளும். இவ்வின நுளம்புகள் இல்லாத பட்சத்தில் இவ்வைரஸின் தாக்கமும் அச்சுறுத்தலும் கட்டுப்பாட்டு நிலையை அடைந்துவிடும். ஏனெனில் இந்த இன நுளம்புகளைத் தவிர வேறு மார்க்கங்களால் பரவக்கூடியதல்ல டெங்கு வைரஸ். அதற்கான சாத்தியமும் இல்லை. அதுவே மருத்துவர்களின் கருத்தாகும்.
அதனால் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரே வழி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பதேயாகும்.
தற்போதைய சூழலில் கடும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் எவருக்காது நோய் நிலை காணப்படுமாயின் கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளக் கூடாது. ஆரம்ப கட்டத்திலேயே தகுதியான வைத்தியரை அணுகி உரிய மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் மழைக் காலநிலையுடன் ஈடிஸ் எஜிப்டைய் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் டெங்கு வைரஸ் காய்ச்சல் என்ற அச்சுறுத்தலையே எதிர்கொள்ள நேரிடாது. அதுவே இப்போதைய தேவையாகும்.