திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், ஐந்து பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 21 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் நேற்று (18) இவர்களை ஆஜர்படுத்தியபோதே,இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைதானவர்களில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சீனன்குடா பொலிஸார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 செப்டம்பர் 15 இல்,உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனை நினைவு கூர்ந்து நடாத்தப்பட்ட ஊர்வலத்திலே,கஜேந்திரன் எம்பி உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டனர்.திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று பொத்துவிலிலிருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.இவ்வூர்வலம்,மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (17) சிலரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதானோரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(ரொட்டவெவ குறூப் நிருபர்)