இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கார்னகி எண்டோவ்மென்ட் (Carnegie Endowment) மற்றும் சசகாவா மன்றம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தியதோடு, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் இன் கொள்கை ஆராய்ச்சி தொடர்பான சிரேஷ்ட உப தலைவர் டென் பெயரினால் (Dan Baer) இது நெறிப்படுத்தப்பட்டது.
பிரதான உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தலையிடுவதற்கு, இந்து சமுத்திர மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் விரும்பவில்லை என்றும், இந்த நாடுகள் தமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உட்பட அவர்களின் முதன்மையான விடயங்களில் கவனம் செலுத்தி, தமது நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பேண முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் தமது நாடுகளின் இறைமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளடக்கிய க்வொட் (Quad) நாடுகள் மற்றும், சீனாவின் இலக்குகளுடன் தொடர்பில்லாத இந்து சமுத்திரத்தின் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் தமது சொந்த முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவும்,
அவற்றை மதிக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கையும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். சீனாவின் எழுச்சியானது APEC மற்றும் ASEAN போன்ற பிராந்திய கட்டமைப்பிற்குள்ளேயே நடந்ததாகவும், அதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அண்மைக் காலமாக இந்தக் கட்டமைப்பிற்கு அப்பால் மாபெரும் வல்லரசுப் போட்டி விரிவடைந்து வருவதால் உறுப்பு நாடுகள் மத்தியில் கவலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
தெற்கு பசுபிக் சமுத்திரம் மற்றும் இந்து சமுத்திரம் ஆகியவை, பெரும் மூலோபாய மதிப்பைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தெற்கு பசுபிக் பிராந்தியம் அமெரிக்க கடற்படைக்கு இன்றியமையாத கேந்திர மையமாகும் என்றும், இரண்டாம் உலகப் போர் காலத்தின் போது இந்து சமுத்திரம் முக்கிய பங்காற்றியது என்றும் தெரிவித்தார்.
பவளக் கடல் (The Coral Sea) மற்றும் மிட்வே போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதும் மற்றும் அட்மிரல் யமமோட்டோவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதும் ஹவாய் உட்பட இந்த தென் பசுபிக் பிராந்தியத்தில் தான் என்பதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை இதன்போது விளக்குவதற்காக, வின்ஸ்டன் சர்ச்சிலின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, “இலங்கையை கைப்பற்றுவது என்பது இந்து சமுத்திரத்தில் அதிகாரத்தை இழப்பதாகும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்து-பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம், குறிப்பாக சீனாவின் சவால்களால் எடுத்துக்காட்டப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது பிராந்திய இயக்கம் மற்றும் ஒத்துழைப்பை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய சக்திகள் மற்றும் நேட்டோவை தொடர்புபடுத்துவதற்காக G7 குழு எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததுடன், பிரான்ஸ் மட்டுமே அதற்கு ஆதரவளித்தது என்றும், இந்த சம்பவம் இந்து சமுத்திர ரிம் சங்கத்தின் (IORA) விதிகளை மீறுவதாகக் கருதப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரத்தின் மேற்பரப்புப் போர் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் வகையில் நீர்மூழ்கிக் கப்பல் போர் அச்சுறுத்தல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்து சமுத்திர ரிம் சங்கத்திற்குள் (IORA) தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
தீவு நாடுகள் தொடர்பிலான பாதுகாப்பு உரையாடல்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அந்த நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை உட்பட பல தீவு நாடுகள் இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, அமெரிக்கா மாலைதீவில் தூதரகமொன்றைத் திறப்பது போன்ற அண்மைக் கால முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆசியான் அமைப்பின் தலையீடு, ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் BRICS+ உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அதிகார சமநிலை உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மாறும் பூகோள நோக்கு, தீவு நாடுகளின் சுதந்திரத்தைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதுடன், மேலும் இந்து சமுத்திர ரிம் சங்கம் (IORA), ஆசியான் (ASEAN) மற்றும் BRICS+ ஆகிய அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இங்கு, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டை வர்த்தகத் துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைவதாகத் தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்து வருவதாகவும், சர்வதேச அரங்கில் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையேயான தொடர்பை இனங்கண்டு, இரு பிராந்தியங்களின் சிறிய தீவு நாடுகளுக்கிடையில் செயலூக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, ‘இந்து-பசுபிக்’ கருத்தியலுக்கு இந்து சமுத்திர ரிம் சங்கம் (IORA), இன் தேவை அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தில் தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, அவர்களின் தனிப்பட்ட முன்னுரிமைகளின் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.