ராகிங் கொடுமை இடம்பெறுமானால் உடனடியாக பொலிஸுக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள்
நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பிலிருந்து பகிடிவதையை இல்லாதொழிப்பதற்காக பகிடிவதை எதிர்ப்பு தேசியக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மேற்படி தேசியக் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர், மனித உரிமை ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உபவேந்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குவதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுமானால், அதுதொடர்பில் 1977, 0112123700 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது 076 5453454 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ உடனடியாக தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் ெகாண்டுள்ளார்.
24 மணித்தியாலமும் செயலில் உள்ள மேற்படி தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளும் போது, உடனடியாக அந்தச் சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே கலாநிதி சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் பகிடிவதை சம்பவங்கள் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. அத்துடன் பல்வேறு காரணங்களினால் வகுப்புத்தடைக்கு இலக்காகியுள்ள 57 மாணவர்கள் காணப்படுகின்றனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 3,63,000 மாணவர்கள் தோற்றியதுடன், அவர்களில் 1,63,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான தகைமையைப் பெற்று க்ெகாண்டுள்ளனர். எனினும் 45,000 மாணவர்களுக்ேக பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். ஏனைய மாணவர்கள் தொடர்பில் சிறந்த வேலைத்திட்டமொன்று அவசியமாகும். பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் உபவேந்தரில் இருந்து கீழ்மட்ட பணியாளர்கள் வரை அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். இந்த வகையிலும் பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் இருந்து பகிடிவதையை முழுமையாக இல்லாதொழிப்பது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார, மனித உரிமை ஆணைக்குழுவின் சட்ட அதிகாரி சட்டத்தரணி ரணில் அபேநாயக்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)