Saturday, September 30, 2023
Home » நாட்டில் டெங்கு நோய் தீவிரம்; செப்டெம்பரில் 1,500 பேர் தாக்கத்திற்குள்ளாகினர்

நாட்டில் டெங்கு நோய் தீவிரம்; செப்டெம்பரில் 1,500 பேர் தாக்கத்திற்குள்ளாகினர்

by sachintha
September 19, 2023 7:07 am 0 comment

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் 18ஆம் திகதிவரை நாட்டில் 1,583 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,461 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கூற்றுப்படி, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆகவுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 13,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டு மேல் மாகாணத்தில் 30,800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல்மாகாணத்தில் பாரியளவிலான நோய்த்தொற்றுக்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்தில் 5,398 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். இம்மாதத்தில் மொத்தம் 9,916 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன, மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் .

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 10 பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக் கூடும் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுமார் 140 வகையான நுளம்புகள் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் வகை நுளம்புகள் டெங்கு வைரஸை மனிதர்களுக்கு பரப்புகின்றன. இவற்றின் இனப்பெருக்க சுழற்சி 8 முதல் 10 நாட்கள் வரை இருக்கும் எனவே பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT