பிரேசிலின் அமேசன் மாநிலத்தில் சீரற்ற காலநிலை காரணமாக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் இருந்த பதினான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அமேசன் மாநிலத் தலைநகர் மனவுஸில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் தொலைதூர காட்டுப்பகுதி நகரான பார்சிலோஸுக்கு பயணித்த விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விமானத்தில் இருந்த 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வானிலை மோசமாக இருந்த சூழலில் சுற்றுவட்டாரத்தை சரியாக காணமுடியாமல் போயுள்ளது. இந்நிலையில் விமானத்தை ஓடுபாதையின் நடுவே விமானி தரையிறக்க முயன்ற நிலையில் அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.