லிபியாவின் டெர்னா நகர் மீது பயங்கர வெள்ளம் தாக்கி ஒரு வாரத்தை எட்டும் நிலையில் கடலில் இருந்து உடல்கள் கரைக்கு தொடர்ந்து அடித்துவரப்படுவதோடு இடிபாடுகளில் உடல்கள் அழுகிவரும் நிலையில் காணாமல்போனோரை தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை நேற்று (17) வெளியிட்ட அறிக்கையில், டெர்னா நகரில் மாத்திரம் 11,300 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 10,100 பேர் தொடர்ந்தும் காணாமல்போயிருப்பதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தை மேற்கோள்காட்டி லிபிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
‘தேடுதல் மற்றும் மீட்பாளர்கள் உயிர் தப்பியவர்களை தேடி ஓய்வின்றி ஈடுபட்டு வரும் நிலையில் எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மேற்படி ஐ.நா அலுவலகம் தெரிவித்தது.
இரண்டு அணைகள் உடைப்பெடுத்ததால் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் சுமார் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த சர்வதேச உதவிகள் வர ஆரம்பித்திருக்கும் நிலையில் அது உயிர்தப்பிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உதவியுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இடிபாடுகளில் இருந்து 10 உடல்கள் உட்பட கடற்கரையில் இருந்த 450க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டதாக லிபியாவில் காணாமல்போனோருக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரான கமால் அல் சிவிசி தெரிவித்துள்ளார்.
‘பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு அது மிக, மிக சிக்கலானதாக உள்ளது. இந்த நடவடிக்கைக்கு மாதங்கள் மற்றும் வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்ற நான் நினைக்கிறேன்’ என ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் டானியால் புயல் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் வழக்கமாக வறண்டு காணப்படும் ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டதால் இரு அணைகள் உடைபெடுத்து வெள்ள நீர் சுனாதி அலை போன்று டெர்னா நகர் ஊடாக கடலை நோக்கி பாய்ந்துள்ளது.
இதேவேளை துப்புரவுப் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், நோய்ப் பரவல், தேவைப்படுவோருக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்ப்பதில் சிரமம் ஆகியவை குறித்து நிவாரண உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
நீரில் பரவும் நோய்கள் குறித்தும் உணவு, உறைவிடம், மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறை குறித்தும் அவை எச்சரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரின் தரத்தையும் கழிவு வெளியேற்றத் தரநிலை குறித்தும் மதிப்பிடப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோரின் சடலங்களால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படும் என்று பரவலாக அஞ்சப்படும் நிலையில், செஞ்சிலுவைச் சங்கமும் உலக சுகாதார அமைப்பும் அவ்வாறு நிகழ்வது அரிது என்று கூறியுள்ளன.