சீனாவின் ஹான்சு நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் விபரத்தை தேசிய ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் இடம்பெற்றுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் 37 விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் பங்கேற்பதற்கு அவிஷ்க பெர்னாண்டோவை பயிற்சியாளராகக் கொண்ட 25 பேர் கொண்ட குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வீரர்கள் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் வெளியிடாத நிலையில் தேசிய ஒலிம்பிக் குழு இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.
டி20 சர்வதேச தொடராக இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் 15 ஆடவர் அணிகளும் எட்டு மகளிர் அணிகளும் பங்கேற்கவுள்ளன. இதில் முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் காலிறுதிச் சுற்றில் இருந்து நேரடியாக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்காக ஆடவுள்ளன.
ஆடவர் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 27 தொடக்கம் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு மகளிர் போட்டிகள் நாளை (19) தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை நடைபெறும். சென்ஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இலங்கை குழாம்: நுவன் துஷார, அஷேன் பண்டார, டயான் லசித் செஹான், கேஷவ பெர்னாண்டோ, லியோன் டானியல், ஷஷின்த தியமன்த, சசித ஜயதிலக்க, ரவிந்து சுமர்ஷன பெர்னாண்டோ, அஹன் சன்சித்த, லஹிரு உதார, விஜயகாந்த் வியாஸ்காந்த், மினோன் லியனாரச்சி, இசித்த டியு விஜேசுந்தர, லஹிரு தர்ஷன சமரகோன், நிமேஷ் விமுக்தி சில்வா.