இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த நடப்புச் சம்பியன் இலங்கை அணி கிண்ணத்தை பறிகொடுத்தது.
ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற இந்த போட்டியில் மொஹமட் சிராஜ் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கே சுருண்ட இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டங்களை பெற்றது.
அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முழு அங்கத்துவ நாடு ஒன்றின் இரண்டாவது மிகக் குறுகிய இன்னிங்ஸ் ஒன்றாகவும் இது அமைந்தது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி ஜெஸ்பிரிட் பும்ரா வீசிய முதல் ஓவரில் குசல் பெரேராவை இழந்தது. இந்நிலையில் மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவர் ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பியது. அந்த ஓவரில் இலங்கையின் நான்கு விக்கெட்டுகள் பறிபோயின.
இந்நிலையில் மத்திய பின்வரிசை வீரர்களும் தமது விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். இதன்போது இலங்கை அணியின் நான்கு ஆரம்ப வரிசை வீரர்களுடன் ஐவர் டக் அவுட் ஆனதோடு இருவர் மத்திரமே இரட்டை ஓட்டங்களை பெற்றனர். குசல் மெண்டிஸ் தட்டுத் தடுமாறி 34 பந்துகளில் பெற்ற 17 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது.
பும்ரா, மொஹமட் சிராஜ் மற்றும் ஹார்திக் பாண்டியா மூவரினதும் பந்துக்கு முகம்கொடுக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திக்குமுக்காடினர். எதிரணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு மத்தியில் அநாவசியமான துடுப்பாட்டத்தால் பல வீரர்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அபாரமாக பந்து வீசிய மொஹமட் சிராஜ் 7 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
ஹார்திக் பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். எதிரணிக்கு எதிர்கொள்ள முடியாத வகையில் பந்துவீசிய பும்ரா 5 ஓவர்களுக்கு 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய இந்திய அணி 6.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 51 ஓட்டங்களையும் எட்டியது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் சுப்மன் கில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றனர் இதன்படி முழு அளவில் ஆடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டி மூன்றாவது குறுகிய ஆட்டமாக பதிவானது. இந்த போட்டியில் மொத்தமாக 129 சட்டபூர் பந்துகளே வீசப்பட்டன.
அதேபோன்று இந்த போட்டியில் மொத்தமாக 101 ஓட்டங்களே பெறப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் போட்டி ஒன்றில்
பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த ஓட்டங்களாகவும் இது இருந்தது.
போட்டி மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமானபோதும் சூரிய வெளிச்சம் முழுமையாக மறைவதற்கு முன் அட்டம் முடிவுக்கு வந்தது அரங்கில் நிரம்பி வழிந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
குறிப்பாக போட்டியின் நாணய சுழற்சி போடப்பட்ட பின்னர் மழை பொழிந்தது ஆடுகளத்தின் நிலைமையை முற்றாக மாற்றுவதாக இருந்தது. இந்த வெற்றியுடன் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.