Wednesday, September 27, 2023
Home » அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்

அஷ்ரப்பின் நினைவு நிகழ்வில் ஹக்கீம்

by damith
September 18, 2023 6:20 am 0 comment

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம். இதற்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அந்திமகால முயற்சிகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக, இன்றைய நினைவேந்தலை எடுத்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 23 ஆவது வருட நினைவு தின தேசிய நினைவேந்தல் நிகழ்வு (16) சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு அஷ்ரப்பின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஷ்ரப்பின் வகிபாகம், இலங்கை தேசிய அரசியலில் அஷ்ரப்பின் சாதனைகள், முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்தவை, சர்வதேச தொடர்புகளை பேண அஷ்ரப் கையாண்ட முறைகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.

மு.கா. தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்துக்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.

கல்முனை மாநகர முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்பின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் நாட்டின் ஆட்சிக் கதிரைகள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பில் இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸேதானாகும். மறைந்த தலைவர் அஷ்ரப் தமது அந்திம காலத்தில் முன்னெடுத்து விட்டுச் சென்ற விடயங்கள் பல உள்ளன.

முக்கியமாக அவர் அந்திம காலத்தில் கட்சியோடு முரண்பட்டு இருந்தவர்கள் மற்றும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து இருந்தவர்களை வீடு வீடாகச் சென்று சந்திப்புகளை நடத்தி, முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்வாங்கும் முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.

இந்த வகையில் வெளியில் உள்ளவர்களையும் நமது பாசறையில் இணைப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்கவேண்டும். இதற்காக முஸ்லிம் காங்கிரஸின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.

நமது அரசியலைப் பொறுத்தவரை அஷ்ரப்புக்கு முன்பும் பின்பும் என்றே எழுதப்படும்.முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி, சிறுமைப்படுத்தி, சிதைத்து விடும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்க முடியாது.அனைவருக்கும் நியாயம் செய்யும் தலைவராகவே கட்சியின் செயற்பாடுகளை நான், முன்னெடுத்து வருகிறேன். முஸ்லிம் காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அனைவரதும் பாசறையாகவும் அரவணைக்கும் அரசியல் கட்டமைப்பாகவும் முன் கொண்டு செல்வோம்.- என்றார்

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரிஷ் ,பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் ஆகியோர் உரையாற்றினர்.

(கல்முனை மத்திய தினகரன், அட்டாளைச்சேனை குறூப், அம்பாறைமாவட்டகுறூப்பெரியநீலாவணை விசேட நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT