மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம் மற்றும் லிபியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தால் உயிரிழந்தோருக்கு ஜனாஸா தொழுகை நடாத்துமாறு,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.இவ்வனர்த்தங்கள் மொரோக்கோவில் எட்டாம் திகதியும் லிபியாவில் பத்தாம் திகதியும் இடம்பெற்றிருந்தன.
இவ்விரண்டு அனர்த்தங்களால் மரணித்த சகோதரர்களுக்கு அல்லா ஹுத்தஆலா சுவனத்தை வழங்கவும், அவர்களது குடும்பத்தார்களுக்கு பொறுமையைக் கொடுக்கவும் மற்றும் காயமுற்றிருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் உலமா சபை வேண்டியுள்ளது.
இவ்வாறான அனர்த்தங்கள், வெள்ளப்பெருக்குகள், சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அவை நீங்க தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடுவது அவசியம். இதுபோன்ற நிகழ்வுகளின் போது மரணிக்கும் எமது சகோதரர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக ஜனாஸாத் தொழுகை நடாத்துவதும் இஸ்லாமிய வழிகாட்டலாகும். இவ்வனர்த்தம் மற்றும் வெள்ளப்பெருக்கால், மரணித்த எமது சகோதரர்களுக்காக இன்று (18) திங்கட்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.