தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் 79.70 கோடி ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை நேற்று திறந்து வைத்தார். நேற்றுக் காலை வேலூரிலுள்ள மேல்மொணவூா் முகாமில் 11 கோடி ரூபா மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை தமிழர்களிடம் கையளித்தார். அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கினார்.
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக, தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்து மேல்மொணவூரில் ஆரம்பித்தார்.
இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 142.16 கோடி ரூபாவில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் நேற்றுக் காலை நடந்தது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொளிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் 79.70 கோடிரூபாவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைத்தார்.
(திருச்சி சாஹுல் ஹமிட்)