வங்குரோத்து நிலையில் இருந்த நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பப்படும் இவ்வேளையில், வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு மீண்டும் நாட்டை பின்னோக்கி நகர்த்த எவரும் முயற்சிக்க வேண்டாமெனவும் இவ்வாறானவர்களின் வலையில் மக்கள் சிக்க வேண்டாமெனவும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சி தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலி கடவத்ஸதர பகுதியில் அண்மையில் நடைபெற்ற கட்சி இணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களால் டிர்லியன் கணக்கில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. ரயில்வே திணைக்களம் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டங்களால் ஏற்பட்ட நட்டத்தின் மூலம் 100 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகளை அமைக்க முடிந்திருக்கும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 மே மாதம் 12ம் திகதி பிரதமராக பதவியேற்ற போது நாட்டை மீள்கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் பற்றி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தார். இவ் வேலைத்திட்டங்கள் பற்றி தற்போது சர்வதேச மட்டத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுக்கும் முன் வைக்கப்பட்டுள்ளன.
இவைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். மேலும் இவை பாராளுமன்றத்துக்கும் முன்வைக்கப்பட்டு அதன் மூலமாக மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிவாக முன் வைக்கப்ட்ட வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது தான் அரசியல் மோசடியாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பில் இடம் பெற்றுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
புதிய வரவு செலவு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பொருளாதார விசேட செயலாளர்கள் நியமிக்கப்படுவர். யாருக்கும் இவ் அலுவலகத்துக்கு யோசனைகளை முன் வைக்க முடியும்.
எனவே மோசடி அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டிச் செல்ல கைகோர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
வெலிகம தினகரன் நிருபர்