ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வருட நினைவு தினம் கடந்த சனிக்கிழமை (16) கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இடம்பெற்றன.
அஷ்ரபின் நினைவுதினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம், மரம் நடுகை மற்றும் விஷேட துஆப்பிரார்த்தனைகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நிகழ்ந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள்,ஊர்ப்பிரமுகர்கள், கவிஞர்கள், பொது மக்கள், கட்சித் தொண்டர்கள்,கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் கட்சியில் இணைந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருது லீ மெரிடியன் ஹோட்டலில் ஏற்பாடாகியிருந்த இக்கூட்டம் பின்னர், பௌஸி விளையாட்டு மைதானத்துக்கு இடமாற்றப்பட்டிருந்தது.
இக்கூட்டத்துக்கு ரவூப்ஹக்கீம் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு, உலமாக்களால் விஷேட துஆப்பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பற்றி சிந்தித்த மர்ஹூம் அஷ்ரப், 1986 காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து தனது 14 வருட அரசியலில் பெரும் விழிப்புணர்வு, சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
1989 முதல் 2000 வரை பாராளுமன்றத்திலிருந்து இவரது பயணம் முஸ்லிம் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால்,அவரது இழப்பு இன்று வரை நினைவு கூரப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி எனைய முஸ்லிம் கட்சிகளும் அஷ்ரபின் இழப்பை நினைவுகூர்ந்திருந்தன.