கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 21 வரை நடைபெறுகிறது. இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதற்கான செயற்திட்டம் (SCOPE) மூலம் இடம்பெறும் இத்திரைப்பட விழாவை சிறகுநுனி கலை, ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ளது.
‘சமூக ஒத்திசைவுக்காக சினிமா’ எனும் தொனிப்பொருளிலான இத்திரைப்பட விழா கடந்த 13ஆம், 14 ஆம் திகதிகளில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பப் பீட மண்டபத்திலும் நேற்றும், இன்றும் நாளையும் கல்லடிப் பாலம், கிழக்கு பல்கலைக்கழக CEDEC மண்டபம் (ஜி.வி வைத்தியசாலை அருகே) ஆகிய இடங்களிலும் எதிர்வரும் 20ஆம், 21 ஆம் திகதிகளில் திருகோணமலை ஜுபிளி மண்டபத்திலும் நடைபெறுகிறது.
தமிழில் உபதலைப்பிடப்பட்ட அல்லது டப் செய்யப்பட்ட ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கென்யா, நைஜீரியா, இலங்கை, இந்தியா, எகிப்து, பொஸ்னியா ஆகிய நாடுகளின் உலகத்தரமான 19 முழுநீளத் திரைப்படங்கள், ஆவணப் படங்களை இத்திரைப்பட விழாவில் அனைவரும் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
குறிக்கப்பட்ட தினங்களில் திரைப்படங்கள் காலை 9.00, பி.ப. 2.00 மாலை 6.00 என மூன்று காட்சிகளாக இடம்பெறும். காலை நேரக் காட்சிகள் க.பொ.த உயர்தர/சாதாரண தர வகுப்பு பாடசாலை மாணவர்களையும் பிற்பகல் காட்சிகள் அரச ஊழியர்களையும் மாலைநேரக் காட்சிகள் பொதுவான பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. திரையிடல்களின் நிறைவில் பார்வையாளர் கருத்துப்பகிர்வு இடம்பெறும்.
தொடராக மூன்று நகரங்களில் 7 தினங்கள் பயணிக்கும் இத்திரைப்பட விழாவின் பிரத்தியேக வைபவம் செப்டம்பர் 17 மாலை 5.30க்கு பழைய கல்லடிப் பாலத்தில் இடம்பெறவுள்ளது. இப்பிரமாண்ட வெளிப்புற நிகழ்வில் இலங்கையின் பிரபல இசை விற்பன்னர் அன்ரனி சுரேந்திரா உள்ளிட்ட கலைஞர்களது இசையாற்றுகையும் அதனைத் தொடர்ந்து சிறப்புத் திரைப்படக்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வரலாற்றுக் காலந்தொட்டு நட்புறவோடு வாழ்ந்த கிழக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கடந்த நான்கு தசாப்த காலமாக நிலவி வரும் விரிசலை நிவர்த்திக்கும் ஒன்று கூடல்கள் இன்று அவசியமாக உணரப்படுகின்றன. பாடசாலைகள், நிர்வாகப் பிரிவுகள், வைத்தியசாலைகள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் இனரீதியாகப் பிரிந்துள்ள சூழலில் இரு சமூக இணைவுக்கான மார்க்கமாக எஞ்சியிருப்பது சினிமாவாகும். அத்துடன் இளந்தலைமுறையினரை அபரிமிதமாக ஈர்க்கும் சக்தியாக தற்கால டிஜிட்டல் உலகில் சினிமா பரிணமித்துள்ளது. ஒன்று சேர்ந்து கற்பதற்கும் பழகுவதற்குமான வாய்ப்பற்றுள்ள கிழக்கின் தற்கால தமிழ், முஸ்லிம் சந்தததியினரைச் சினிமா மூலம் ஒன்றிணைக்க முடியுமெனும் நம்பிக்கையோடு சிறகுநுனி கலை ஊடக மையம் 2018 முதல் பல்வேறு திரைப்பட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.