சர்ச்சைக்குரிய செனல் 4 காணொளிக்காக போலியான தகவல்களை பெற்றுக்கொடுத்து தன்னை தவறாக வழி நடத்தி பேட்டியினை பெற்றுக்கொள்வதற்கு இந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆங்கில ஊடகவியலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், செனல் 4 காணொளியில் உள்ள அநேகமான காட்சிகள் இந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையிலிருந்து எடுக்கப்பட்டதாவென சந்தேகிப்பதாகவும், சுவிட்சர்லாந்தின் முன்னாள் தூதுவரும் இந்நாட்டின் தேசிய ஊடக நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதியான சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
அவருடனான நேர்காணலை இங்கு தருகின்றோம்.
செனல் 4 வின் சர்ச்சைக்குரிய காணொளியில் உங்களுடைய உருவமும் குரலும் உள்ளடக்கிய காட்சிகள் பல உள்ளன. இக்காட்சிகளில் நீங்கள் எதன் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள்?
இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கிலத்தில் காலைநேர நிகழ்ச்சியொன்றை நடத்தும் ஊடகவியலாளர் ஒருவரே இதற்கான ஆரம்ப முயற்சியை எடுத்துள்ளார். அவருடன் நான் நீண்ட காலமாக தொடர்பிலிருந்தேன். அது மாத்திரமல்ல அவரை அந்த அலைவரிசையில் சேர்த்துவிட்டதும் நான் தான்.
அவர் என்னிடம் வந்து பிரித்தானிய ஐ.ரி.என் செனலுக்கு ஒரு ‘வொய்ஸ் கட்’ தர முடியுமா? என கேட்டார். நான் அதற்கு விருப்பம் தெரிவித்தேன். அதன்படி பிரித்தானிய ஐ.ரி.என் செனல் குழுவினர் என கூறப்பட்டவர்கள் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வந்தார்கள். அவர்கள் இரண்டரை மணி நேரம் பதிவு செய்தார்கள். அவர்கள் என்னிடம் ராஜபக்ஷக்களின் கடந்த கால அரசியல் வெற்றிகள் தொடர்பாகவே வினவினார்கள். அன்று அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்ற முறையில் இது பற்றி நீண்ட விளக்கம் அளித்தேன். அதன்பின்னர் சில காலம்வரை இக்காணொளி குறித்து எந்தவித செய்தியும் இருக்கவில்லை. ஆனால் திடீரென கடந்து வாரம் இக்காணொளி வெளியானது. நான் ஆச்சரியமடைந்தேன். உண்மையில் நான் பெற்றுக்கொடுத்த காணொளி பெருமளவு எடிட் செய்யப்பட்டிருந்தது. அதில் எனது உருவமும் சில நிமிட காணொளியுமே காணப்பட்டது. அதைவிட அதிசயம் என்னவென்றால் நான் ஒருபோதும் காணொளியையோ அல்லது நேர்காணலையோ பெற்றுக்கொடுக்காத செனல் 4 அலைவரிசை இக்காணொளியை ஒளிபரப்பியதுதான். நான் இக்காணொளியை பி.பி.சி அலைவரிசையின் ஊடாகவே பார்த்தேன். எனக்கு எவ்வித அறிவித்தலும் அளிக்காமலே செனல் 4வில் எனது செய்தி ஒளிபரப்பப்பட்டது. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக கலாச்சாரத்தை சீர்குலைத்த ஒரு சம்பவம் என நான் இதனை குறிப்பிடுவதில் தவறில்லை.
உண்மையில் அவதூறான அலைவரிசை என பெயர் பெற்றுள்ள செனல் 4 நேர்காணலை பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தால் நான் ஒருபோதும் பேட்டியளித்திருக்க மாட்டேன்.
நீங்கள் அக்காணொளிக்காக அளித்த பேட்டி தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?
என்னிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வினவினார்கள். அதற்கு நான் தெளிவாக இத்தாக்குதலுக்கு அரசியல் தொடர்பு இல்லை எனவும் தாக்குதலை மேற்கொண்டது தீவிரவாத முஸ்லிம் இளைஞர்கள் குழு எனவும் தெரிவித்தேன். அதன்பின்னர் ராஜபக்ஷகளின் அரசியல் நடவடிக்கை மற்றும் பிரபல்யம் தொடர்பாக கேட்டார்கள். நான் அது தொடர்பில் தெளிவாக எனது கருத்தை தெரிவித்தேன். ஆனால் இறுதியில் தாக்குதலை நடத்தியது முஸ்லிம் தீவிரவாத குழுவினர் என்பதற்கு எனது ஆய்வு பூர்வமான மற்றும் தர்க்க ரீதியான கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் நான் கூறிய எதுவும் செனல் 4 காணொளியில் இல்லை. எனது உருவமும் நான் 30 வினாடிகள் தெரிவித்தவை மாத்திரமே காணொளியில் காணப்பட்டது. உண்மையில் என்னை தவறாக வழிநடத்தி போலியான விடயங்களை முன்வைத்து என்னிடம் பெறப்பட்ட இரண்டரை மணி நேர காணொளி மோசமாக தொகுக்கப்பட்டு அதில் காணப்பட்ட விளக்கங்கள் முற்றாக திரிபுப்படுத்தப்பட்டிருந்தன.
* இது உங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா?
நான் எனது அரசியல் கருத்துகளுக்காக எவ்வேளையிலும் ஆஜராவேன். நான் பல ஊடகங்களில் நிறைவேற்று தரத்தில் பதவிகள் வகித்தவன் என்பதோடல்லாமல் சிரேஷ்ட சட்டத்தரணியும் ஆவேன். எனது அனுமதியின்றி ஒளிபரப்பான இக்காணொளியால் நான் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு என்னை தவறாக வழிநடத்தி பேட்டியை பெற்றுக்கொண்ட நிறுவனத்தை போன்று இந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையின் காலை நேர ஆங்கில நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளரும் பொறுப்புக் கூற வேண்டும்.
உங்களுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள செனல் 4 எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா?
இது தொடர்பான அடிப்படை விடயங்களை பற்றி ஆராய்ந்து வருகின்றேன். இச்சம்பவம் மற்றும் என்னை தவறாக வழிநடத்தி பெறப்பட்ட பேட்டி மற்றும் அதற்காக பிரிட்டிஷ் ஐ.ரி.என் அலை வரிசையின் பெயரை பயன்படுத்தியமை குறித்து முறைப்பாடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். அந்த முறைப்பாட்டை முதலில் பிரித்தானிய ஐ.ரி.என் அலைவரிசைக்கே முன்வைக்கவுள்ளேன். அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் சரியான முறையில் நடைபெறும்.
இக்காணொளி நாட்டை சங்கடத்துக்குள்ளாக்கவும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வு என்பவற்றை குலைப்பதற்குமான திட்டமாக இருக்கக்கூடும். உண்மையில் செனல் 4 எப்பொழுதும் எம் போன்ற நாடுகளை நிலையற்றதாக்கி மோதலை ஏற்படுத்தி பல நோக்கங்களை வெற்றி கொள்ளும் முயற்சியையே மேற்கொள்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அன்றைய எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக பெயர் குறிப்பிடப்படவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
அது அர்த்தமில்லாத கதை. சில குழுவினர் கூறும் கருத்துக்கு அமைய சஹரான் போன்று கார்தினால் அவர்களும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை விரும்பினார் போன்றது. சிலர் சஹரானின் பயங்கரவாத நடவடிக்கை கோட்டாபாய வெற்றிக்கு காரணமானது என கூற முடியும். ஆனால் அந்த குரூர பயங்கரவாத தாக்குதல் ராஜபக்ஷக்களுக்கு தெரிந்தே நடந்ததாக உறுதி செய்ய எவ்வித சாட்சியமும் இல்லை. யாரும் வாய்க்கு வந்தவாறு குற்றச்சாட்டுகளை சுமத்தலாம். ஆனால் அக்குற்றச்சாட்டு உண்மை என்பது அவர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். இன்று மாத்திரம் அல்ல காலம் காலமாக இவ்வாறான பல குற்றச்சாட்டுகள் காணப்பட்டுள்ளன. 1959 இல் பண்டாரநாயக்கவை கொலை செய்தது சோமாராம என நிரூபிக்க கண்ணால் கண்ட சாட்சியங்கள் பல இருந்தன. ஆனால் அதனை ஏற்காதவர்களும் இருந்தார்கள். பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் புலிகள் அமைப்பு மற்றும் தேசப் பிரேமி மக்கள் இயக்கம் என்பன பல கொலைகளைச் செய்திருந்தன. விஜய, லலித், கொப்பேகடுவ போன்றவர்களின் படுகொலைகள் அவற்றில் பிரதானமானவை. ஆனால் அக்கொலைகள் அனைத்தையும் பிரேமதாசவின் தலையில் சுமத்தினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என காலத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து விடயங்களிலும் உண்மை என்ன என ஆராய்ந்து குற்றம் சுமத்த வேண்டும்.
இப்ராஹிம் நானா ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியலில் இருந்தார். அவரின் பிள்ளைகள் சஹரானின் பயங்கரவாதத்துடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தி மரணம் அடைந்தார்கள். ஆனால் சஹரானுடன் ஜே.வி.பி. க்கு தொடர்பு உள்ளது என நான் கூற மாட்டேன். அதைவிடுத்து நிரூபிக்க முடியாதவற்றை கூறுவது அரசியல் குற்றமாக சுட்டிக்காட்டலாம். இன்று சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார். அவரால் அந்த குற்றங்களை நிரூபிக்க முடியாது. போலி குற்றச்சாட்டுகளால் குற்றவாளியாக்கப்பட்ட பிரேமதாசவின் மகனே இன்று உறுதி செய்ய முடியாதவற்றை பகிரங்கமாக கூறுவது கவலைக்குரிய விடயமாகும்.
இவர்கள் சஹரான் தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டது கோட்டாபயவை அதிகாரத்துக்கு கொண்டு வர என கூறுகிறார்கள். அவ்வாறு என்றால் அன்று கார்தினால் அவர்களுக்கும் அரசியல் சார்பு கோட்டாபய பக்கமே இருந்தது. அவ்வாறு என்றால் சஹரான் போன்று கார்தினலும் அவரின் வெற்றியை பிரார்த்தித்தாரா? உண்மையில் இதனை ஆச்சரியத்துக்கான காரணம் என சுட்டிக்காட்ட முடியும்.
நீங்கள் நாட்டை குழப்பத்துக்கு உள்ளாக்க திட்டம் உள்ளது என எதன் காரணமாக கூறுகின்றீர்கள்?
தமிழ் மக்களிடையே யுத்தத்துக்கான மனநிலையை ஏற்படுத்தவே முயற்சி செய்கின்றார்கள். அத்திட்டத்தின் பின்னால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இருக்கின்றார்கள். உண்மையில் தமிழ், முஸ்லிம் என எம்மிடையே பேதம் கிடையாது. நாம் வேலைத்தளத்தில், காரியாலயத்தில் ஒற்றுமையாக பணிபுரிகிறோம். ஆனால் சிலருக்கு அந்த ஒற்றுமையை காண பொறுக்க முடியவில்லை. அவர்கள் தங்களின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இனங்களுக்கு இடையே குரோதத்தை விதைக்க முயற்சிக்கின்றார்கள். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தீராத பகை உண்டு. இவர்களுக்கும் அதுபோன்ற குரோதத்தை சிங்கள, தமிழ் இருதரப்பாரிடையும் ஏற்படுத்துவதே தேவையாக உள்ளது. அதனால் நான் தமிழ் மக்களிடம் மிகவும் அன்புடன் அரசியல் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் இந்நாட்டில் ஏற்பட்ட ஒற்றுமையை குலைத்து புரிதலின்மையை ஏற்படுத்த செனல் 4 நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது பற்றிய உங்களுடைய கருத்து?
எமது நாடு யுத்தத்தின் பின் ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பத்தில் முயற்சி எடுத்தது. அன்று எமக்கு சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் கூட வெற்றியடைய கூடியதாக சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டது
அந்நிலமையில் செனல் 4 எமது நாட்டின் யுத்த குற்றங்கள் நடைபெற்றதாக கிளீன் பீல்ட் என்னும் பெயரில் ஆவண திரைப்படம் ஒன்றை முன் வைத்தது. அவர்கள் இறுதி யுத்தத்தின்போது 40 ஆயிரம் பேர் வரை சமூக கொலை செயப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு படுகொலை நடக்கவில்லை. அக்காலத்தில் யுத்த களத்தில் ஏழாயிரம் மரணங்கள் அளவிலேயே நிகழ்ந்திருந்தன. செனல் 4 வின் இந்த ஆவண திரைப்படத்தால் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. செனல் 4 இன்னும் புலனாய்வு பிரிவை தொடர்புபடுத்தி போலியான தகவல்களை சமூகத்திற்கு வழங்குவதற்காகவே முயற்சி செய்கின்றது.
உயிர்த்த தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியமா?
சர்வதேச விசாரணை அல்ல தேவைப்படுவது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் உள்ளூர் விசாரணையாகும். அதற்குத் தேவையான சர்வதேச புகழ் பெற்ற நபர்கள் இங்கும் இருக்கிறார்கள்.
உதித குணவர்தன
தமிழில் -– வீ.ஆர். வயலட்