Wednesday, April 24, 2024
Home » கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் ஞானதீப விருது விழா

கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் ஞானதீப விருது விழா

மலையக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் நடேஷன் சுந்தரேசனால் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கல்...

by damith
September 18, 2023 4:19 pm 0 comment

கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் ஞானதீப விருது வழங்குதல் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் முன்னாள் அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மலையக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் நடேஷன் சுந்தரேஷன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் மூக்கைய்யா பிரதான வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது விசேடமாக மலையக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் நடேஷன் சுந்தரேஷன் ஞானதீப விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் மூக்கைய்யாவுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் மலையக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் நடேஷன் சுந்தரேஷன் அவர்களால் குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பகல்போசன சமையலுக்கென சமையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மலையக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் நடேஷன் சுந்தரேஷன் உரையாற்றும் போது…

நாங்கள் எவ்வளவுதான் பணிகள் புரிந்தாலும் இடைஞ்சல்கள் சவால்கள் வருவது வழக்கம். இது உந்து சக்தியாகவும் மருந்தாகவும் அமையும் என்று கூறி எனக்கு கிடைத்த இந்த பாராட்டுதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலகெங்கும் எமது இந்து மதத்தின் பெருமையை எடுத்துச் சென்ற சுவாமி விவேகானந்தரின் பெயரிலே இயங்கும் மலையக மண்ணில் அமைந்துள்ள பாடசாலையில் காலடி வைத்தமையையிட்டு நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். பெருமையும் அடைகின்றேன்.

என்னுடைய சமூகப் பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்ற பேராசிரியர் எஸ். மூக்கையா மற்றும் பேராசிரியர் சந்திரபோஸ் ஆகிய இருவருடைய ஊக்குவிப்பின் காரணமாகத் தான் இந்த விருது கிடைத்திருக்கின்றது. நிச்சயமாக எனது பெற்றோர்களுக்குத் தான் இந்த விருதை நான் சமர்ப்பிக்க வேண்டும். ஈன்ற பொழுதும் தன் மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். அதாவது என்னுடைய பெற்றோர்களுக்கு என் கடமையைப் பூர்த்தி செய்திருக்கின்றேன். இன்னும் செய்யவுள்ளேன். அந்த வகையில் விருதினைச் சமர்ப்பித்து விட்டு மென்மேலும் அவர்களுடைய பெயர் ஓங்க சமூகப் பணிகளை மேற்கொள்ளச் சித்தமாகவுள்ளேன் என்பதை இந்த இடத்தில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது மலையகப் பிரதேசத்தின் கல்வி நிலையை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது இந்த நாட்டின் அரசியலில் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கின்றது. நல்ல சூழல் நிலவுகின்றது. நல்ல அரசியல் கட்டமைப்புக்கள் இருந்தாலும் அவர்களால் எல்லா அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். மலையகத்தின் மாற்றத்திற்கான தீர்வு கல்வி. கல்வி ஒன்றேதான். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பட்டதாரிகள் உருவாக வேண்டும். இதைத் தான் நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் தெரிவித்து வருகிறார்.

மாணவர்கள் மென் திறமைகளை வளர்க்க வேண்டும். வானத்தைத் தொட வேண்டும் என்று வழிகாட்டப்படும் தலைமைத்துவப் பயிற்சி மாணவர்களுக்கு இருத்தல் வேண்டும். அத்தகைய வழிகாட்டல் கருத்தரங்குகளை நாங்கள் மலையகப் பாடசாலைகளில் செய்து வருகின்றோம். அது முக்கியம்.

எமது திட்டத்தின் அடிப்படையில் எவ்வாறு உயர் கல்வியினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் மென் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது பற்றி நாங்கள் மலையக மாணவர்களுக்கான வழிகாட்டல்களைச் செய்து வருகின்றோம். இதனை இரு பேராசியர்கள் மாணவர்களுடைய காலடிக்குச் சென்று வழிகாட்டல் உரைகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்காக எமக்கு ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றிய அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூன்றாவது கட்டம், கல்வியில் உயர்ச்சி பெற்றாலும் அறநெறி இருத்தல் வேண்டும். நாங்கள் படித்து விட்டு எமது பெற்றோர்களை மறக்கக் கூடாது. நாம் பிறந்த நாட்டை மறக்கக் கூடாது. நமது இந்து சமயத்தை மறக்கக் கூடாது.

உலகெங்கும் எமது பட்டதாரிகள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போல் நாமும் வர வேண்டும். ஒருவரால் இன்னும் 50 பட்டதாரிகளை உருவாக்க முடியும். அது தான் என்னுடைய நோக்கம். நமது மலையகத்தில் இருந்து நிறையப் பட்டதாரிகள் உருவாக வேண்டும். உலக நாட்டை நோக்கி இன்னுமின்னும் அதிகளவிலான பட்டதாரிகள் வெளிநாடுகள் சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும். அதேபோல் அங்கு இருப்பவர்கள் மலையக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இதன் காரணமாக அவர்களோடு சேர்ந்து நாமும் பங்காற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாங்கள் தான் எங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் நான் ஹப்புத்தளையில் பிறந்தவன். அவுஸ்திரேலியாவில் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஏனென்றால் வடபுலத்தில் இருந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் நிறையப் பேர் வடபுலத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்காக நிதி உதவிகளைத் திரட்டி உதவி செய்து வருகிறார்கள். அவைகளைப் பார்த்த பின்பு எமது மலையகத்தில் வாழ்கின்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவா ஏற்பட்டது.அவர்களைப் போன்று பெரியளவில் செய்யா விட்டால் நம்மால் முடிந்தளவு ஏதாவது செய்வோம் என்ற அடிப்படையில் உங்கள் பாடசாலைக்கு வருகை தந்துள்ளேன். இந்தப் பணி ஒருவர் இருவர் செய்யும் பணியல்ல. பலரும் சேர்ந்து செய்யவதாகும். மலையகத்தில் கல்வி கற்று இன்று இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பு மலையக மக்களுக்கு மிக மிக அவசியம்.

எவ்வளவுதான் அரசியல்வாதிகள் தம் மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும் அவர்களால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதுதான் யதார்த்தம். அவர்களால் மக்களின் தேவையை பூரணமாக பூர்த்தி செய்ய முடியாது. தற்போது நான் தனி மனிதனாக செய்து வருகின்றேன். இதைத் திறன்படச் செய்து காட்டினால் என்னோடு சேர்ந்து இயங்குவதற்கு நிறையப் பேர் வருவார்கள். என்னோடு கைகோர்த்துக் கொண்டு பங்களிப்பு நல்க, செயற்பட வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இப்பாடசாலையின் மண்டபத்தின் திருத்தப் பணிகளையும், முன்பள்ளிப் பாடசாலையினையும் நிர்மாணித்துக் கொடுக்க முயற்சி செய்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் எஸ். முக்கையா

அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கு வருகை தந்துள்ள நடசேன் சுந்தரேசன் அவர்கள் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பங்களிப்புச் செய்வது பாராட்டத்தக்க விடயமாகும். எமது மாணவர் சமூகத்திற்கு நல்ல உயரிய அபிலாஷைகளையும் கல்வி வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்ற கால கட்டத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். நான் 1960 களில் மத்திய பகுதிகளில் பல்கலைக்கழகம் சென்றேன். அப்பொழுது பல்கலைக்கழகத்தில் பல நிகழ்வுகள் நடைபெறும்.

2000 மாணவர்கள் கல்வி பயிலும் நேரத்தில் 28 பேர் இருந்தால் காந்த கல்லைக் கொண்டுதான் இழுத்துப் பார்க்க வேண்டும். அந்த காந்தக் கல்லில் என்னவென்று ஒட்டிக் கொள்வது ஒன்றுமில்லை.ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்கள் அப்பொழுது மலையகத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வதற்கு உற்சாகப்படுத்தப்படுவதில்லை.பேராசிரியர் தனஜெயராஜ் அவர்கள் தமிழ் துறைத் தலைவராக இருந்தார். அவரைச் சிங்கி என்று அழைப்பார்கள். அவர் தான் என்னுடைய பெயரை அறிந்திருந்தவராக இருந்தார்.

இன்று ஏனைய பல்கலைக்கழகங்களில் வந்திருப்பவர்கள் வருடா வருடம் ஒன்று கூடலை உற்சாகத்துடனும் பெருமையுடனும் நடத்துவார்கள். நாங்களும் அதற்குச் சொல்லுவோம். இப்பொழுது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2 இலட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி பயிலும் போது 2500 மலையக மாணவர்கள் இருக்கிறார்கள். தற்போது 600, 700 பேர் அளவில் பல்கலைக்கழகத்திற்குச் செல்லுகிறார்கள். நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஆனால் இல்லை என்று சொல்லவில்லை. இவை போதுமா என்ற கேள்விதான் எழுந்திருக்கின்றது. உயர் கல்வித் துறையில் திறந்த பல்கலைக்கழகம் முதல் ஏனைய பல்கலைக்கழகம் வரையிலும் 8 எட்டு இலட்சம் பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நாங்கள் கொஞ்சப் பேர் இருந்து கொண்டு அதைப் பெரிதாகப் பேசி திருப்தி அடைபவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களுடைய போதும் என்ற மனப்பான்மையாக இருக்கலாம். இது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. இது எங்கே போதுமானது. உயர் கல்வி விடயத்திலே மாணவர்களாகிய நீங்கள்தான் முயற்சி செய்து சாதிக்க வேண்டும். ஆசிரியர் இதற்கான மாற்றத்தை எப்படிக் கொண்டு வரலாம் என்று யோசிக்க வேண்டும். போட்டியான உலகத்திலே பெறுமதி வாய்ந்த விடயங்களை அடைவதானால் கடும் முயற்சிகள் செய்ய வேண்டும். ஒன்றுமே இலேசாகக் கிடைப்பதும் அல்ல. இன்று அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.பெரும்பாலான தோட்டப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் இருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்னவென்றால் உங்கள் வாழ்க்கையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. என்னோடு அக்கால கட்டத்தில் தோட்டப் பகுதிகளில் இருந்த படித்த மாணவர்கள் சொல்லுவார்கள் மாலை 6.00 அல்லது 7.00 மணிக்குள் படித்து முடித்து விட வேண்டும். மின்சாரம் இல்லை. எங்களுடைய வீட்டிலும் ஆக பெட்ரோல் மெக்ஸ் விளக்குத்தான் இருந்தது. அந்த பெற்றோல் மெக்ஸ் வந்த பிறகுதான் பெரிய மாற்றம் ஏற்பட்டது. எனவே இந்த மின்சார விளக்கு என்பது கல்விக்கு மிக முக்கியமானது. இதை வைத்து கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

மாணவர்களாகிய நீங்கள் கல்வி கற்பது வெற்றியடைவது என்பது இது உங்களுக்கு மாத்திரம் அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய உத்வேகம். அது உங்களுடைய அங்கீகாரம். ஆசிரியர்கள் பெறும் சம்பளம் பெரிய சம்பளம் அல்ல. அது அவர்களுக்கு இறுதிக் காலங்களில் ஆத்ம திருப்தியை ஏற்படுத்தக் கூடியவை. பெரும்பாலானவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.ஆகவே உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொழில் மிகவும் கௌரவமான நல்ல தொழில். இதனால் உங்களது சேவையின் மூலம் இறுதி காலப் பகுதிகளில் நீங்கள் நல்லதொரு காரியத்தைச் செய்த ஆத்ம திருப்தியோடு வாழலாம். மாணவர்கள் கற்று முன்னேறும் போது அது உங்களுக்கு மாத்திரமல்ல நமது பின்தங்கிய சமூகத்திற்கு நீங்கள் முன்னோடியாக இருந்து அவர்களை ஊக்கு வித்தீர்கள் என்ற ஒரு பெருமை உங்களுக்கு உண்டு.

எனவே பின்தங்கிய சமூகத்தில் இருந்து வந்த ஆசிரியர்களானாலும் சரி மாணவர்களானாலும் சரி நமக்கும் பெரிய சமூகப் பணி இருக்கின்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் நம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு அட்சயபாத்திரமல்ல. எடுத்துப் போடப் போட திருப்பவும் வந்து கொண்டு இருக்காது.

கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ் சிவஞானசுந்தரம்

‘சித்திரமும் கைப் பழக்கமும் செந் தமிழும் நாற்பழக்கமும் வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் கொடையும் நற்பும் தகையும் பிறவிக் குணம்’ என்பார்கள்

எனவே கொடை என்பது சிலருக்கு பிறவியிலே பிறந்த குணம் என்பார்கள். ஆகவே தான் கொடையினைச் செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன் நடசேன் சுந்தரேசன் அவர்களுடன் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. அந்த வகையில் எமது நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவாவில் கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்குச் சென்று பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கிறார். மலையக தமிழ் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல உதவிகள் செய்து வருகிறார். இவ்வாறான ஒருவர் எமது பாடசாலைக்கு வருகை தந்தது எமக்குப் பெருமைக்குரிய விடயமாகும். அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து எங்களுடன் ஆறு ஏழு மாதங்கள் தொலைபேசியில் உரையாடினோம்.இந் நிகழ்வில் தான் அவரைச் நேரடியாகச் சந்திக்கக் கிடைத்தது.

உண்மையில் மலையக இருநூறு வருட காலத்தில் நாம் எங்கு இருக்கின்றோம். ஏன் நாம் அந்த இடத்தில் இருந்து இன்னும் நகர முடியாமல் இருக்கின்றோம்.எனினும் எங்களை நகர்த்திச் செல்வதற்காக எங்களுடைய மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறிவுக் கற்கை நெறிக்குள் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்ற அவாவுடன் எமது பாடசாலைக்கு வருகை தந்துள்ளார் நடசேன் சுந்தரேசன். அத்துடன். மலையக மண்ணின் மைந்தன் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். மூக்கையா வருகை தந்துள்ளார். மலையகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இவ்வாறு பிரகாசிக்கிறார்கள். அவர்களுக்கும் ஓர் எண்ணம் இருக்கிறது எமது சமூகத்தை முன்நோக்கிச் கொண்டு செல்ல வேண்டும் என்று. இத்தகைய பெரியார்களுடைய புனித பாதங்கள் எமது பாடசாலை மண்ணின் பூமியில்பட்டது, பெருமையாக இருக்கிறது.

எங்கள் பாடசாலையின் கல்வி மறுமலர்ச்சியானது சுமார் பத்து வருட காலமாக க. பொ. த சாதாரணப் பரீட்சையில் 100 விகிதம் சித்திகளைப் பெற்று வருகிறோம். கணித, விஞ்ஞானப் பாடம் உட்பட அநேகமாக இவ்விரு பாடங்களிலும் Cக்கு மேலான பெறுபேறுகளைப் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தப் பாடசாலை சமுதாயத்திற்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கி வருகின்றது. ஒரு மாணவனும் பரீட்சையில் தோல்வியடைவதில்லை. எனினும் கணித, விஞ்ஞானத் துறையில் ஆசிரியர் பற்றாக் குறைகள் காணப்படுகின்றன. இந்தக் குறைபாட்டை நிர்வத்தி செய்யும் வகையில் இப்பாடங்களை மீட்டிக் கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு மின் பொறியியல் தொழில் நுட்ப வகுப்புக்கள் நடசேன் சுந்தரேசன் அவர்களினால் ஏற்படுத்தப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT