நாட்டில் போதைப்பொருட் குற்றச்செயல்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இவ்வாறான அதிகரிப்பை முன்னொரு போதுமே இக் குற்றச்செயல்கள் பெற்றதில்லை.
நாடு நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதால் கடல் மார்க்கவும் கூட போதைப்பொருட்கள் சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்படுகின்றன. சர்வதேச கடற்பரப்பினைப் பயன்படுத்தி கப்பல்கள் ஊடாகவும் ஏற்கனவே அவை கடத்தி வரப்பட்டிருக்கின்றன. இதற்கு இந்நாட்டின் கடற்படையினர் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைகளும் அவற்றின் ஊடாக முறியடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்களும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
அதேநேரம் விமானம் மார்க்கவும் கூட போதைப்பொருட்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்படவே செய்கின்றன. அவையும் அவ்வப்போது முறியடிக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கைய்ன் கடத்தல் முறியடிக்கப்பட்டது.
மேலும் போதைப்பொருட் துஷ்பிரயோகங்களையும் குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காக சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் உச்ச பட்ச நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். சட்டங்களும் தண்டனைகளும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் சட்டவிரோதப் போதைப்பொருட்களின் பாவனைக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் அவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டிருப்பதோடல்லாமல் சமூக, கலாசார நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் உள்ளனர். அத்தோடு இப்பாவனைக்கு அடிமையானவர்கள் ஆரோக்கிய ரீதியிலும் தாக்கங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவு மிக அதிகம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி நோய் நிலைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்ற அதேநேரம், அவற்றின் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் விஷேட புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வும் அளிக்கப்படுகின்றன.
போதைப்பொருட் குற்றங்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட, சில பாடசாலைப் பிள்ளைகள் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பாவிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனையால் நாட்டிலும் சமூகத்திலும் தாக்கங்களும் பாதிப்புக்களும் அதிகரித்துள்ளது போன்று குற்றச்செயல்களும் அதிகரிக்கவே செய்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் சமூக, கலாசார சீரழிவுக்கு பாரிய பங்களிப்பை நல்கக்கூடியதாக போதைப்பொருட் குற்றங்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இதன் தாக்கங்களும் பாதிப்புகளும் தெளிவாக உணரப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து மட்டங்களிலும் இந்நிலைமை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இலங்கையின் உயர் சபையாக விளங்கும் பாராளுமன்றம் கவனம் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புக்களையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கபட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் தலைமையில பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட இக்குழு கடந்த ஜுன் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டமை தெரிந்ததே.
போதைப்பொருள் குற்றச்செயல்கள் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்த கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் இக்குழு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்கேற்ப எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஆர்வமுள்ள தரப்பினர் இது தொடர்பிலான தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் மின்னஞ்சல் மூலமோ அல்லது பாராளுமன்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் விரிவாக ஆராய்வதற்கு இக்குழு தீர்மானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோதப் போதைப்பொருள் குற்றச்செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நடவடிக்கைகளின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழித்துக்கட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே நாட்டின் அனைத்து மக்களின் விருப்பமும் கூட. அதற்காக எல்லாத் தரப்பினரும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அது நாட்டின் சமூக, கலாசார மேம்பாட்டுக்கு அளிக்கும் பாரிய பங்களிப்பாக அமைவதோடு போதைப்பொருள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி தனிநபர்களும் குடும்பங்களும் பாதிக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.