அரச அலுவலகங்களில் ஈ-மெயிலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சைபர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழினுட்பத்துறை பதில் அமைச்சர் கனக ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைய மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் முடக்கப்பட்டன.
இதன் காரணமாக பல அரச நிறுவனங்களின் தரவுத் தொகுதிகள் சீர்குலைந்துள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின்ன பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட 300 அரச அலுவலகங்களின் ஈ-மெயில் 5000 ற்கும் அதிகமானவைகளில் தகவல்கள் சீர்குலைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல அரச நிறுவனங்களுக்கு எமது ICP நிறுவனம் ஈ-மெயில் வசதிகளைப் பெற்றுக்கொ டுத்துள்ளது. அந்த தரவு தொகுதி 2007 ஆம் ஆண்டிலிருந்து எமது நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி ஈ-மெயில் தரவு கட்டமைப்பு தற்போது காலாவதியான நிலைக்கு சென்றுள்ளது. அதனால் அந்த கட்டமைப்பு பல்வேறு செக்கியூரிட்டி தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)