வழக்குப் பொருட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த தங்க நகை ஒரு தொகையை, அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸில் கடமை புரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேற்படி வழக்குப் பொருட்களான தங்க நகைகளை, முறைப்பாட்டாளர்களிடம் மீள வழங்குமாறு
கடந்த ஜூலை 31 இல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வகையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் அந்த நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி, அந்த தங்க நகைகளை நுகேகொட மற்றும் மகரகம நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய, அக்மீமன பிரதேசத்தில் மறைந்திருந்த மேற்படி பொலிஸ் உப பரிசோதகரை கைது செய்ய, நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)