கொழும்பு, மருதானை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில், ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ள சிறுமியின் தந்தையும் சூட்டுக் காயங்களுக்கு இலக்கானதுடன், இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே ஆறுவயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் இருவரே மேற்படி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள சிறுமியின் தந்தையை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அவர் கடந்த வருடம் கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ள குற்றச் செயலொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ள வேளையில் முச்சக்கர வண்டி ஒன்றில் அவரும் அவரது மனைவியும் ஆறு வயது சிறுமியும் பயணம் செய்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்திலேயே நீதிமன்றத்திற்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையிலேயே அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)