தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று (18) உத்தரவு பிறத்துள்ளது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.
குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய ஊர்திப் பவனிக்கு பொலிஸார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.
அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா விசேட நிருபர்