Tuesday, October 15, 2024
Home » கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

- நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை

by Rizwan Segu Mohideen
September 18, 2023 1:51 pm 0 comment

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. மீதான கொலை வெறித் தாக்குதலை கண்டிப்பதாக, இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி காவல்துறை இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது சிங்கள இனவெறிக்கும்பல்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டின் நினைவையொட்டி, திருகோணமலையிலிருந்து
செப்டெம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கு பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் தியாக தீபம் திலீபனுக்கு பொதுமக்கள்அஞ்சலி செலுத்தும் வகையில் அணிதிரண்டனர்.
வெள்ளிக்கிழமை (15) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பயணம் நேற்றுமுன்தினம் (16) மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்தது.

மூன்றாவது நாளான நேற்று (17) திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தது.

மக்களை எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த கூடினர். 50 க்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் வந்து பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
கப்பல்துறை முக சந்திக்கருகில் ஊர்தி வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவையெல்லாம் காவல்துறை இருக்கும் போதே நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கல்லெறிந்த அந்த இனவெறிக்கும்பல் நேரடியாக ஊர்தி அருகே வந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சூழ்ந்து கொண்டு கொலை வெறியோடு தாக்கினர்.

பின்னர் பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்குதலிலிருந்து பாதுகாத்து மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராசா கஜேந்திரன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய அமைதிப்படையை கண்டித்தும்
5அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1987 செப்டம்பர் 15 ஆம் தேதி கேணல் திலீபன் உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவை போற்றும் வகையில் இம்மாதிரியான ஊர்தி பயணத்தை ஒருங்கிணைப்பது வழக்கம்.

முறையான முன் அனுமதியோடு தான் நடத்தப்படுகிறது. ஆனாலும், இனவெறியர்கள் இத்தாக்குதலை தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

இப்படி தாக்குதலை நடத்தி தமிழீழ உறவுகளை அச்சுறுத்த முடியாது.நாடாளுமன்ற உறுப்பினர் மீதான இத்தாக்குதலை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இன்னமும் தொடரும் இனவெறிப்போக்குக்கு எந்த தீர்வும் காணாமல், இனவெறி அரசுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கும் பௌத்த இனவாதிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது.

தொடரும் இத்தகைய இனவெறித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உண்டு.

ஆகவே,இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தீர்வு காண இந்தியாவும் தலையிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
– வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x