நூற்றுக் கணக்கான அடையாளம் காணப்படாத மர்மப் பொருட்கள் பற்றிய சம்பவங்களில் அவைகளின் பின்னணியில் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் அதற்கான சாத்தியத்தை அது மறுக்கவில்லை.
அடையாளம் காணப்படாத மர்மப் பொருள் தொடர்பில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நாசாவின் அறிக்கை கடந்த வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்டது.
36 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியாக அவதானிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இதன் கடைசி, பக்கத்தில் “நாசா விசாரணை நடத்திய நூற்றுக்கணக்கான அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின் பின்னணியில் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாக முடிவுக்கு வருவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது பற்றி இந்த அறிக்கையில் முடிவு ஒன்றுக்கு வரவில்லை. அடையாளம் தெரியாத வேற்றுக் கிரகவாசிகளின் தொழில்நுட்பம் பூமியில் இயங்கக் கூடும் என்ற சாத்தியத்தை நாசா மறுக்கவில்லை.