அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம ஒருங்கிணைப்பிலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ. வீரசிங்க, ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஆகியோரின் இணைத் தலைமையிலும் இக்கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஷ, கலையரசன் மற்றும் மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அறுகம்குடா பிரதேசத்தில் சுற்றுலாத்துறை கைத்தொழில் துறையின் முன்னேற்றத்தின் பொருட்டு நீண்டகால குத்தகை அடைப்படையில் உட்துறை பத்திரதாரர்களுக்கு வழங்க பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி கரையோரம் பேணல் திணைக்களம் இக்கூட்டத்தில் முன்மொழிவினைச் சமர்ப்பித்திருந்தது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ “இம்முன்மொழிவு சூழலுக்கு அவசியமானது. காடுகள் அழிக்கப்படக் கூடாது” என பல காரணங்களைக் கூறியதுடன் இந்த இடங்களை வன இலாகாவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச செயலகம் திருடர்கள் நிறைந்த இடம் எனவும், அங்கு சட்டவிரோ பேர்மிட் வழங்குவது கூடுதலாக இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்களை அவர் சொல்லிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்,
“பொத்துவில் சட்டவிரோக பேர்மிட் என்று சொல்வதை நீங்கள் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
அறுகம்குடா என்பது சுற்றுலாத்துறையின் இதயமாகும். அந்தப் பிரதேசத்திலே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பல முன்னடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொத்துவில் இறத்தல்குளத்தை 200 மில்லியன் ரூபாய் நிதியில் அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் பொத்துவில், லகுகல, சாகாமம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வசதியுடன் விவசாய செய்கைக்கும் நீர் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் பொதுவிளையாட்டு மைதானம் இல்லாமல் விளையாட்டு வீரர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். வட்டிவெளி எனும் இடத்தில் உள்ள காணி சுவீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இங்கு கொண்டுவரப்பட்டபோது அது தொடர்பில் கலையரசன் எம்.பி.யும் பேசினார். இனமுறுகல் எற்படாத வகையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். உண்மையாகவே நானும் அதனையே விரும்புகின்றேன். இதற்காகத்தான் பல மாதங்களாக பேசினோம் என்று முஷாரப் எம்.பி தெரிவித்தார்.
இங்கு பொதுவிளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடமாக வட்டிவெளி எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன். இதற்குரிய ஆவணங்களை பரிசீலித்து சரியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன் மாட்ட ஒருங்கிணைப்புக் குழவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்கள் மற்றும் தாழ் நிலங்களில் சட்டவிரோத நிர்மாணிப்பு பணிகளை குறைப்பதற்கு ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்பத்தி வரைபடம் வரைந்து அதற்கமைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்கப்பட்டது.
ஒலுவில் துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அனர்த்த அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்படும் கரையோரப் பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு ஒலுவில் தொடக்கம் சாய்ந்தமருது வரையான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு தேவையான திட்ட முன்மொழிவுகளை தயாரித்து அதனை தேசிய அணர்த்த ஒருங்கிணைப்புக் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகளின் பாதிப்பினை குறைப்பதற்கு வனவிலங்கு திணைக்களத்தின் ஊடாக GPS COLLAR போடுவதற்கும், மக்களை அறிவுறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
எஸ்.எம்.அறூஸ்…?
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)