Sunday, June 23, 2024
Home » பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை இந்தியாவுடனான இறுதிக்கு தகுதி

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை இந்தியாவுடனான இறுதிக்கு தகுதி

ஆசிய கிண்ணம்:

by gayan
September 16, 2023 5:48 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 4 போட்டியில் கடைசி பந்து வரை நீடித்த பரபரப்புக்கு மத்தியில் 2 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதாயத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற இந்தப் போட்டி மழைக்கு மத்தியில் 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் இலங்கை அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளுக்கு ஆறு ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. சமான் கான் வீசிய ஐந்தாவது பந்துக்கு சரித் அசலங்க வேகமாக துடுப்பை சுழற்றியபோது பந்து முனையில் பட்டு ஸ்லிப் திசையில் பெளண்டரியை நோக்கி சென்றது.

தொடர்ந்து கடைசி பந்துக்கு இரண்டு ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் அசலங்க நிதானமாக அடித்து அந்த இரண்டு ஓட்டங்களையும் இலகுவாக பெற்று இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்போது இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்று கைகொடுத்தனர். எனினும் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனதால் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் திசை திரும்பியது.

எனினும் சரித் அசலங்க 47 பந்துகளில் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன நீக்கப்பட்டு அவருக்கு பதில் உபாதையில் இருந்து மீண்டிருக்கும் குசல் ஜனித் பெரேரா அழைக்கப்பட்டார். அதேபோன்று கசுன் ராஜித்தவுக்கு பதில் பிரமோத் மதுஷான் அழைக்கப்பட்டார்.

மழை காரணமாக தாமதித்து ஆரம்பமான இந்தப் போட்டி 45 ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின் பாதியில் மழை குறுக்கிட்டதால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் மதீஷ பதிரண 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி நாளை கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 11ஆவது தடவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT