யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கடந்த வாரம் நான்காவது திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், வித்தியாலயத்தின் பழைய மாணவர் ந. சண்முகதாஸ் (லண்டன்) அவர்களின் நிதி உதவியின் கீழ் தனது பெற்றோராகிய அமரர்கள் திரு. திருமதி நவரட்ணம் பொன்னம்மா ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நான்காவது நவீன திறன் வகுப்பறையானது பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த வலிகாமம் வல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. மதியழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திறன் வகுப்பறையின் திறன்பலகையை சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி ச. சிவமலர் திரைநீக்கம் செய்து வைத்ததோடு திறன்பலகையை பாடசாலையின் அதிபர். பா. பாலசுப்பிரமணியம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிக்கல்விப் பணிப்பாளர், இப்பாடசாலை விளையாட்டுத் துறையிலும் கல்வித் துறையிலும் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளை பெற்று வருகின்ற இந்நேரத்தில், இத்திறன் வகுப்பறை அமையப் பெற்றமையானது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலும் உந்துசக்தியாக அமைந்திருக்கின்றது எனக் கூறினார்.
அத்துடன் வித்தியாலய அதிபர் தனது தலைமையுரையில், இப்பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களும் நவீனமயப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புக்களை பெறவேண்டும் என்று கூறியதுடன், இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்திற்கும் கல்வி அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.