நாட்டில் இளவயதினர் மத்தியில் திடீர் மரணங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அதிகமான திடீர் மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாக அமைந்திருக்கின்றது. மரணமடைந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களைப் பார்க்கிலும் வயதில் குறைந்தவர்கள் பலரும் உள்ளனர்.
முன்னைய காலத்தில் மாரடைப்பு என்பது நடுத்தர வயதைக் கடந்தவர்கள் மாத்திரமே எதிர்நோக்குகின்ற பாரதூரமான வியாதியாக இருந்து வந்தது. மாரடைப்பு மரணங்களும் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் மத்தியிலேயே பெரும்பாலும் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறானதாக இல்லை.
இருபத்தைந்து வயதுப் பருவத்திலேயே இளவயதினர் பலர் மாரடைப்பு வியாதிக்கு உள்ளாகுவதை அறியமுடிகின்றது. மாரடைப்பு காரணமாக இளவயதினர் பலர் திடீரென மரணமடைவதையும் அறிகின்றோம். கடந்த ஒருவருட காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மாரடைப்பினால் திடீரென மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் அநேகமானோர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறான இளவயது மரணங்கள் பரிதாபமான சம்பவமாகவே பார்க்கப்படுகின்றன.
இளவயதினர் மத்தியில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதற்கு பலரும் பலவிதமான காரணங்களைக் கூறுகின்றனர். இலங்கையில் மூன்றுவருட காலத்துக்கு முன்னர் உருவெடுத்த கொவிட் தொற்று இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேச்சுகள் உலவுகின்றன. ஆனால் அதற்கான சான்றுகளை மருத்துவ நிபுணர்கள் இதுவரை முன்வைக்கவில்லை. ‘காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததைப் போல’ என்ற உவமையைத்தான் இதற்குக் கூற முடியும்.
விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்காமல் எதையுமே உறுதியாகக் கூறிவிட முடியாது. மக்கள் மத்தியில் ஊகங்கள் நிலவுவதை ஆதாரமாக வைத்துக் கொண்டு உடனடியாக முடிவுக்கு வந்துவிடவும் முடியாது. உலகெங்கும் ஏராளமான நாடுகளில் கொவிட் தொற்று ஏற்பட்டு மில்லியன்கணக்கான மக்கள் உயிரிழந்தது எமக்ெகல்லாம் தெரிந்த விடயமாகும். அவ்வாறிருக்ைகயில், எமது நாட்டில் மாத்திரம் இளவயது மரணங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன என்பதைத்தான் முதலில் ஆராய்வது முக்கியம்.
இந்த மரணங்கள் தொடர்பாக சிலர் வேறு விதமாகக் கூறுகின்றார்கள். கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மக்கள் ஏற்றிக் கொண்ட தடுப்பூசியே இதற்கெல்லாம் காரணமென்பது அவர்களது வாதம். கொவிட் தடுப்பூசியே மாரடைப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தங்களுக்குள் ஊகித்துக் கொள்கின்றார்கள். மக்களில் பலர் கொவிட் தடுப்பூசி குறித்து ஆரம்பத்திலேயே பலவிதமான அச்சமூட்டும் நம்பிக்ைககளை தங்களுக்குள் கொண்டிருந்தமை இப்போது எமக்கு நினைவுக்கு வருகின்றது. கொவிட் தடுப்பூசியானது குழந்தைப்பேற்றை தடுத்து விடுமென்பதும் அவ்வாறான ஆதாரமற்ற கதைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு பலரும் பலவிதமான ஊகங்களைக் கூறுகின்ற போதிலும், இளவயது மாரடைப்புக்கான சரியான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமலேயே உள்ளது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகின்றனர்.
இருதயக் குழாய்களில் ஏற்படுகின்ற அடைப்புதான் மாரடைப்புக்கான பிரதான காரணமாகின்றது. மாரடைப்புக்குள்ளான இளவயதினரில் அனைவருக்கும் குருதியில் கொழுப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அதுமாத்திரமன்றி, இளவயதினர் பலர் தங்களுக்கு குருதிக் கொழுப்பு அல்லது இரத்தசீனியின் அளவு அதிகமாக உள்ளதென்பதை அறிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளனர் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இலங்கையர்கள் கொழுப்புணவுகளை அதிகளவில் உணவில் எடுத்துக் கொள்வது வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எப்போதும் எச்சரித்தபடியே வருகின்றனர். இளவயதினர்களில் பெரும்பாலானோர் தங்களது வீட்டில் சமைக்கப்படுகின்ற உணவுகளில் இப்போது நாட்டம் கொள்வதில்லை. வீட்டில் அவர்களது தாய்மார் சமைக்கின்ற போதிலும் கூட, ஹோட்டல் உணவுகளிலேயே அவர்கள் நாட்டம் கொள்கின்றனர்.
வாலிபர்கள் பலரிடம் இப்பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. கொத்து, பீற்ஸா, டொல்பின், பேகர் என்றெல்லாம் விதம்விதமான உணவுகள் இன்று உணவுக்கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. இரவு வேளைகளில் உணவுக்கடைகளில் இளவயதினர்கள் அதற்காக அலைமோதுவதைக் காண முடிகின்றது.
இந்த விரைவுணவுகள் தொடர்பாக மருத்துவ உலகில் அச்சம் தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், இளவயதினர் அதுபற்றியெல்லாம் கவனம் கொள்வதில்லை. உணவுக்கு சுவை மாத்திரமே பிரதானமென்று அவர்கள் எண்ணுகின்றனர்.
இந்த விரைவுணவுகளில் அடங்கியுள்ள எண்ணெயின் அளவு மிகவும் அதிகமாகும். கொத்துரொட்டி ஒன்றைத் தயாரிக்கும் போது அதனுள் ஊற்றப்படுகின்ற எண்ணெயைப் பார்த்தால் அது புரிந்து விடும். அத்தனை எண்ணெயும் எமது இரத்தத்துடன் கலந்து இழைக்கப் போகின்ற தீங்கைப் பற்றி பலர் புரிந்து கொள்வதில்லை.
எண்ணெய், உப்பு, இனிப்பு என்பதெல்லாம் அளவோடு அமைந்தால்தான் உணவு ஆரோக்கியமாக இருக்கும். அளவுமீறினால் உயிராபத்துத்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது!