பென் ஸ்டொக்ஸின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 181 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பெற்றதோடு 4 போட்டிகளைக் கொண்ட தொடரிலும் 2–1 என முன்னிலை பெற்றது.
ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணிக்காக ஸ்டொக்ஸ் 124 பந்துகளில் 15 பெளண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 182 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற இங்கிலாந்து வீரராக அவர் புதிய சாதனை படைத்தார்.
ஸ்டொக்ஸ் முன்னதாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் அண்மையிலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 368 ஓட்டங்களை பெற்றது. டேவிட் மாலன் 96 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து அணி 39 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கே சுருண்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லோட்ஸில் நடைபெறவுள்ளது.