Friday, September 29, 2023
Home » வதந்தி: ஓர் இஸ்லாமிய நோக்கு

வதந்தி: ஓர் இஸ்லாமிய நோக்கு

by sachintha
September 15, 2023 8:02 am 0 comment

இன்றைய நவீன காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையாகும்.

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்” (49:12) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கின்றது.

இவ்வசனத்தின் ஊடாக அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்களைப் பட்டியலிட்டுள்ளான். அவைகளாவன, 1) ஊகம், 2) துருவித்துருவி ஆராய்தல், 3) புறம். இம்மூன்று விடயங்களிலும் நன்மையைவிடவும் பாவமே மிகைத்து நிற்கும். இந்த மூன்று விடயங்களும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாக உள்ளன.

ஊகம் என்பது உறுதிப்படுத்தாத வதந்தியாகும். வதந்தியை துருவித்துருவி ஆராயும்போது பிறர் மீது புறம் பேசக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும். வதந்தியால் பரவக்கூடிய செய்தியால் நன்மையை விட தீங்குகளே அதிகம் ஏற்படும். எனவே, வதந்தியை பாவங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டு அதிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவு விட்டிருக்கிறது.

“முஃமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (அல் குர்ஆன் 49:6).

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஸக்காத் நிதியை வசூலிப்பதற்காக வலீத் பின் உக்பா (ரழி) அவர்களை பனீமுஸ்தலிக் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாம் வரும் முன் கொலையொன்று சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது. வலீத் பின் உக்பா (ரழி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அக்கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையைத் திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.

இதை கண்ட வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் எண்ணியபடி வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள். மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.

1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) சக்காத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.

இவ்வதந்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், காலித் (ரழி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அது மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதைக் கண்டார்கள். இச்செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரழி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஸக்காத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் “நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்” என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT