மனித உடலில் வெளிரங்கமான சில பகுதிகள் இருப்பது போன்று அந்தரங்கமான சில பகுதிகளும் உண்டு. அந்தரங்கமான விடயங்களை நாம் எப்படி வெளிப்படுத்த மாட்டோமோ, அவ்வாறே அந்தரங்கமான பகுதிகளையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது.
அவைகளை மறைத்து வைப்பதுதான் மானம். அவற்றை வெளிப்படுத்துவது அவமானம். மானம் காப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகவே சேர்க்கப்படுகிறது. மானத்தை காக்கும் ஒரு கேடயம் தான் வெட்கம். மானத்தை காக்கும் ஒரு பொக்கிஷம் தான் ஆடை.
வெட்கத்தன்மைதான் மறைவிடங்களை மறைப்பதற்கு தூண்டுகோலாக அமைகிறது. மறைவிடங்களை வெளிப்படுத்துவது வெட்கமற்ற தன்மையின் வெளிப்பாடு. மானம் காப்பதும், மறைவிடங்களை மறைப்பதும் வெட்கத்தின் அடையாளமாகும்.
‘நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்’ என்றும் (ஆதாரம்: முஸ்லிம், புஹாரி) ‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர், தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள்.
ஏனெனில், நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ எனவும் (ஆதாரம்: புஹாரி) நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்
ஒருவர் வெட்கப்படுவது நல்ல செயல்தான். வெட்கத்தை ஆடையாக அணிந்தவரிடம் மக்கள் குறை காணவோ, குறை கூறவோ முடியாது. அது மனித வாழ்வின் உயிர்மூச்சு போன்றது. வெட்கமுள்ளவன் நல்ல மனிதனாக வாழ்வான். வெட்கம் கெட்டவன் மிருகமாகவும், பாவியாகவும் மாறிவிடுகிறான்.
வெட்கத்தால் நன்மை மட்டுமே விளையும். வெட்கம் தவறிவிட்டால், கண்டதும் செய்ய நேரிடும். வெட்கம் ஒரு அருங்குணம். அது நன்மையைத் தூண்டும். வெட்கமின்மை ஒரு துர்குணம். அது தீமையைத் தூண்டும்.
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ‘வெட்கம் இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கை சொர்க்கத்தை நல்கும். வெட்கமற்ற தன்மை முரட்டு சுபாவமாகும். முரட்டு சுபாவம் நரகத்தை நல்கும் எனக் கூறினார்கள்’. (ஆதாரம்: அஹ்மது)
மேலும் ‘ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறந்த நற்குணம் உண்டு. இஸ்லாத்தின் சிறந்த குணம் வெட்கம் ஆகும்’ என்றும் (ஆதாரம்: இப்னுமாஜா) ‘வெட்கமும், இறைநம்பிக்கையும் இணைபிரியாத இரு அம்சங்கள். அவ்விரண்டில் ஒன்று விலகினால் மற்றொன்றும் விலகிவிடும்’ என்றும் (ஆதாரம்: பைஹகீ) அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.
மறைவிடங்களை வெளிப்படுத்துவது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. மறைவிடங்களை மறைப்பது இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வெட்கத்தலங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். மறைத்து வாழ்வார்கள். வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவது மானக்கேடான காரியம் என்று அல்லாஹ் அல் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.
‘(நம்பிக்கையில்லாத) அவர்கள் மானக்கேடான காரியத்தைச் செய்யும்போது ‘எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை இறைவனின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?’ என்று கேட்பீராக’. (7:28)
ஆடை என்பது இறைவன் மனிதகுலத்திற்கு வழங்கிய மகத்தான ஒரு அருட்கொடையாகும். மனித இனம் தவிர வேறெந்த இனமும் ஆடை அணிவதில்லை. நாம் அணியும் ஆடை நமது மறைவிடங்களை மறைத்து, மானம் காக்க வேண்டும். மானம் பறிபோகக்கூடாது.
எனவே ஆண்களும், பெண்களும் தமது வெட்கத்தலங்களை மறைப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. உண்மையான வெற்றி இதில்தான் உள்ளது.