நாட்டின் சவால் மிகுந்த காலகட்டத்திலும் வீழ்ச்சியடையாத நிறுவனமாக லேக்ஹவுஸ் நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சி தருவதாக, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் 25 வருட சேவை நிறைவை நினைவுகூரும் ஊழியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
தனியார் நிறுவனமாக செயற்பட்டபோதும், அரசுடைமையாக்கப்பட்ட பின்னும் லேக்ஹவுஸ் நிறுவனமானது சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டுக்குரியது.
நாடு பெரும் வீழ்ச்சியடைந்து, அரச நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தபோதும் லேக்ஹவுஸ் நிறுவனம் சிறந்த நிலைமையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். சவாலான காலகட்டத்தில் இந்த நிறுவனத்தை பொறுப்புடன் திறம்பட முன்னெடுத்துச் சென்ற முன்னாள் நிறுவனத் தலைவர் அனுஷ பெல்பிட்ட, ஜயந்த நவரத்ன, தற்போதைய தலைவர் ஹரேந்திர காரியவசம் உள்ளிட்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
நாட்டின் நெருக்கடியான மற்றும் சவாலான காலத்தில் சவால்களை முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளில் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கும் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் 25 வருட சேவை நிறைவை நினைவுகூரும் ஊழியர்களுக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)