‘நாட்டில் போலி பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம், ‘தமது உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்தாத வரைக்கும் அவர்கள் சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம்’ எனவும் கேட்டுள்ளது.
நேற்று வெளியான இந்த அறிவுறுத்தலுக்கு பல தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன. உண்மையில் மக்கள் அறிவூட்டப்பட வேண்டிய விடயம் இது. ஏற்கனவே பதிவாகியுள்ள சில சம்பவங்களின் அடிப்படையில்தான் இந்த அறிவுறுத்தலை பொலிஸ் தலைமையகம் விடுத்திருக்கின்றது. இந்த அறிவுறுத்தலை மக்களும் வரவேற்றுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் என தம்மை தெரிவித்துக் கொள்ளும் சிலர் வீடுகளிலும் நிறுவனங்களிலும் பாரிய மோசடிகளை மேற்கொண்டிருப்பதும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான முறைப்பாடுகளும் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் பொலிஸ் திணைக்களம் இந்த அறிவுத்தலை விடுத்திருக்கின்றது. அதனால் இது கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளக்கூடிய அறிவுறுத்தல் அல்ல.
மோசடி மற்றும் ஏமாற்றுச் செயல்களில் ஈடுபடுவதற்காக சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அதற்காகத் தமக்கு சாதகமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தவே செய்வர். அந்த வழிமுறைகளை அவர்கள் தவிர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். இதற்கு பல உதாரணங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறிக்கொள்பவர் என்றாலும் தமது உத்தியோகபூர்வ அடையாளத்தை முதலில் உறுதிப்படுத்தும் வரைக்கும் சோதனைகளை மேற்கொள்ளவோ வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இடமளிக்கக் கூடாது. அவ்வாறான நபரிடம் தமது உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு முதலில் கோர வேண்டும். அதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் பெரும்பாலும் தமது உத்தியோகபூர்வ உடையுடன்தான் கடமையில் ஈடுபடுவர். சிலர் சிவில் உடையில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆன போதிலும் இவர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டையோ, நிறுவனத்தையோ, வாகனத்தையோ சோதனை செய்ய வேண்டுமென பொலிஸார் எனக்கூறிக் கொண்டு வருபவரிடம் தமது உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோருவது அவசியமானது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தமது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறும் நபர் சோதனைகளை மேற்கொள்ள இடமளிக்கலாகாது. அவர்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு உடனடியாக தகவல் வழங்க வேண்டும். அதன் ஊடாக இவ்வாறான போலி பொலிஸாரை விரைவாகவும் வேகமாகவும் சட்டத்தின் முன் கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.
இதைவிடுத்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள இந்த அறிவுறுத்தலைக் கருத்தில் கொள்ளாது பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறிக் கொள்பவருக்கு ஒத்துழைப்புடன் செயற்படும் போது இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுக்க நேரிடுவதைத் தவிர்க்க இயலாது. அவ்வாறான துரதிர்ஷ்ட நிலைக்கு முகம்கொடுப்பதற்கு எவரும் துணை போகக்கூடாது.
அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் போலி பொலிஸார் குறித்து ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். அதனைத் தவிர்த்துக் கொள்ளவே கூடாது.
அதேநேரம் போலி பொலிஸாரின் நடமாட்டம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினரும் கூடுதல் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். பொலிஸ் உத்தியோகத்தர் என்ற போர்வையில் சட்டத்தைக் கையில் எடுக்க எவருக்கும் இடமளிக்கலாகாது. இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களை விரைவாகக் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும். அதற்காக மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதன் ஊடாக போலி பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது துரிதமாகும். மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் இவ்வாறானவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நவடிக்கையானது, இவ்விதமான செயலில் வேறொருவர் ஈடுபட எண்ணிப் பார்க்காத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினருக்கு அப்பால் வேறு எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க இடமளிக்கவே கூடாது. அதுவே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.