கல்வி அமைச்சு, யுனிசெப் தலைமைத்துவம்
கடந்த மூன்று வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலும் உள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன தலைமை தாங்குகின்றன.
கல்வி அமைச்சுத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85% பேர் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும், அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க, அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தத் தேசிய உற்பத்தியில் 2% இற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்பொழுது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-6% ஆக இருக்க வேண்டும் என்ற சர்வதே அளவுகோலுக்குக் கீழ் காணப்படுவதுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகிறது.
‘தேசிய வரவு, செலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை, குறிப்பாக ஆரம்பத் தரங்களுக்கு அதிகரிக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகிறது. சிறுவர்களின் அடிப்படைக் கற்றலை ஊக்குவிக்கும் அதேநேரம், கல்வியில் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய திறன் மிக்க மனித வளத்தைக் கட்டியெழுப்ப முடியும்’ என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களையும், ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும், நாட்டின் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.
‘எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் சமூகப் பொருளாதாரத் திறன்களே சிறுவர்கள் தமக்கான மற்றும் தமது குடும்பங்கள், சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன’ என யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் தெரிவித்தார். ‘நாடு எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான இன்னல்களால் கல்வியை இழப்பவர்கள், மெதுவாகக் கற்றுக்கொள்பவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின் கற்றல் சாதனையில் விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான உடனடி நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சின் முயற்சிகளைப் பாராட்டுகின்றோம் என்றார்.