இலங்கை கடற்படையினருக்கான கலப்பு வாயு முறையிலான சுழியோட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படையின் அதி நவீன சுழியோட்ட உதவிக்கப்பலான INS Nireekshak, நேற்று (14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பலானது கடற்படைப் பாரம்பரியங்களுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. அதன் பின்னர், இக்கப்பலின் கட்டளைத் தளபதி ஜீது சிங் சௌஹான், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பி எஸ் டி சில்வாவை சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது குறித்த கப்பல் தரித்து நிற்கும் 8 நாட்களில் வழங்கப்படும் சுழியோட்ட பயிற்சிகள் குறித்து சுமூகமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இக்கப்பலில் யோகா அமர்வுகள், பாடசாலை மாணவர்களுடனான சந்திப்பு மற்றும் கரையோரம் தூய்மையாக்கல் போன்ற நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், 28ஆவது ஆண்டு நிறைவுதினக் கொண்டாட்டங்களும் இக்கப்பலில் இடம்பெற்றிருந்ததுடன் பிராந்திய பிரதி தளபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த INS Nireekshak (A15) கப்பலில் ஆறுபேர் பயணிக்கும் சுழியோட்டக் கலங்கள் இரண்டும், மூவர் பயணிக்கும் சுழியோடல் கலம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இக்கப்பலானது அனர்த்த நிலையில் இருக்கும் நீர்மூழ்கியிலிருந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை ஆழ்கடலில் சுழியோடிகளுக்கான பயிற்சிகளையும் வழங்கும் வல்லமையினையும் கொண்டுள்ளது.
இதேபோன்ற பயிற்சிகளுக்காக இக்கப்பல் 2019 செப்டெம்பர் மற்றும் 2022 மார்ச் ஆகிய காலப்பகுதிகளில் திருகோணமலை துறைமுகத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இலங்கை கடற்படையினருடன் இந்திய கடற்படையினர் மேற்கொள்ளும் இதுபோன்ற தொடர்ச்சியான ஈடுபாடு இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திறன் விருத்தி முன்னெடுப்புகளின் அங்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.