அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச இளைஞர்களுக்கு தொழில்நுட்பவியல் கல்வி மூலம் அரச, வெளிநாட்டு மற்றும் சுயதொழில்களை பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த சில்வெர் ரோன் பாறூக் சேர் (எம்.ஏ.பாரூக்) சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.
1970 களின் பின்னர் இப்பிரதேசத்தில் தொழில்நுட்பக் கல்வியின் முன்னோடியாக தன்னை நிலைநிறுத்தி ‘சில்வர் ரோன்’ எனும் தொழில்பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து பல தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கியவர் அவர்.
1972 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த டொக்டர் பதியூதீன் மஃமுத் அக்கரைப்பற்றுக்கு வருகை தந்த வேளை, அவரை வரவேற்று கப்பல் வடிவம் ஒன்றை உருவாக்கி ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அந்த வரவேற்புக்கப்பலை உருவாக்கியவர்களில் இவரும் பிரதானமானவர்.
1976 ஆம் ஆண்டுகளிலிருந்து அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் றேடியோ மெக்கானிசம் எனும் தொழில்நுட்பப் பாடத்தை கற்பித்து பல மாணவர்கள் அத்துறையில் பிரகாசித்து விளங்க இவர் வழியமைத்தார்.
அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி சான்றிதழை வழங்கி NVQ முறையில் மதிப்பீடுகளை செய்யும் முறையை தனியார் நிறுவனங்களில் செயற்படுத்திக் காட்டியவர். சுனாமிக்குப் பின்னர் அவர் சமூக நிறுவனங்கள் ஊடாக பல சமூகப் பணிகள் செய்தார்.
மின்பாவனையாளரின் நலன் கருதி மின்கட்டணத்தை தனியாக Online counter மூலம் அக்கரைப்பற்று மக்கள் வங்கியில் செலுத்த ஆரம்ப காலத்தில் முயற்சி எடுத்து, அதனை ஏற்படுத்த உதவினார்.அவரது பணிகளை இப்பகுதி மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
எம்.எஸ்.எம்.றிஸ்வான்…?
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)