ரயில் போக்குவரத்து சேவை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரயில்வே சேவையை அத்தியாவசியச் சேவையாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார். சம்பளம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே சாரதிகள் சங்கத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் கடந்த 11 ஆம் திகதி இரவு முதல் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன் விளைவாக நேற்றுமுன்தினம் மாத்திரம் 118 ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக ரயில் பயணிகள் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். குறிப்பாக பயணிகள் ரயில்களில் சனநெரிசல் அதிகமாகக் காணப்பட்டதால் ரயிலின் கூரைக்கு மேலும் பயணிக்கும் துரதிஷ்டகர நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில்தான் ரயிலின் கூரை மேல் பயணித்த பயணிகளில் ஒருவரான மாணவரொருவர் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் இரு பயணிகள் வேறு இடங்களில் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
அத்தோடு அரச, தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமுகமளித்திருந்த ஊழியர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததோடு, அந்த ஊழியர்கள் நேரகாலத்தோடு வீடு செல்லவும் அரச தனியார் நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனாலும் வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கையால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இவ்வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த ரயில் சாரதிகள் நேற்றும் கடமைக்கு திரும்பி இருக்கவில்லை.
ஆனால் அத்தியாவசிய சேவைப் பிரகடனம் நடைமுறையில் இருக்கும் போது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. இப்பிரகடனத்தை மீறி செயற்பட்டால் கடமைக்கு திரும்பாதவர்கள் எனக் கருதப்பட்டு சுயமாகப் பதவியில் இருந்து விலகியவர்களாகக் கருதப்படுவர். அத்தோடு அவர்களது சொத்துக்களை அரசுைடமையாக்கவும் இந்த அத்தியாவசிய சேவைகள் பிரகடன ஏற்பாடுகள் வகைசெய்கின்றன.
அதன் காரணத்தினால் இப்பிரகடனம் அமுலில் இருக்கும் போதும் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது குறித்து பலவித ஐயங்களும் ஏற்பட்டுள்ளன. நாட்டில் 277 ரயில் சாரதிகள் உள்ளனர். அவர்களில் 84 பேர் மாத்திரமே வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் கடமையில் ஈடுபட்டிருக்க, செயலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றார். அத்தோடு இத்தொழிற்சங்கத்தை சேர்ந்த 70 வீதமானோர் கடமைக்கு சமுகமளித்திருக்க, 30 வீதமானோர் தான் இவ்வேலைநிறுத்தத்தில் பங்குபற்றியுள்ளனர்.
இவ்வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் அதனை முன்னெடுக்கும் சங்கத்தின் பெரும்பாலான அங்கத்தவர்கள் பங்குபற்றவில்லை. அதனால் இத்தொழிற்சங்கத்தின் பெரும்பாலான அங்கத்தவர்களின் இணக்கப்பாட்டின்றி முன்னெடுக்கப்படும் இத்தொழிற்சங்க நடவடிக்கை அவர்களது அபிப்பிராயத்திற்கு முரணாக இடம்பெறுகிறது என்பதும் தெளிவானது.
இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும் போது இத்தொழிற்சங்க நடவடிக்கை மறைமுக நோக்கம் கொண்டதாக இருக்க முடியும் என்பதுதான் பலரதும் கருத்தாக உள்ளது. ரயில் பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி அற்ப அரசியல் இலாபம் பெறுவது அதன் நோக்கமாக இருக்க முடியும்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு குறுகிய காலப்பகுதிக்குள் மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சக்திகள் நாட்டில் உள்ளன. அந்த சக்திகளை திருப்திப்படுத்துவதற்கான முயற்சியாகக்கூட இந்நடவடிக்கை அமைந்திருக்கலாம்.
இவ்வாறான சூழலில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 84 ரயில் சாரதிகளையும் உடனடியாகக் கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம், தவறும் பட்சத்தில் தாமாகவே பதவி இழந்தவர்களாகக் கருதப்பட்டு அதற்குரிய கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரயில் பயணிகளின் நலன்களை முன்னிலைப்படுத்தியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ரயில் சாரதிகள் கடமைக்கு திரும்ப வேண்டும். அதுவே ஆரோக்கியமானது. தம் கோரிக்கைகளுக்காக ரயில் பயணிகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்காது, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதே உசிதமானது.