ரயில் போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தன. சில கோரிக்கைகளை முன்வைத்து இத்தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டன. இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பல பிரதேசங்களுக்கும் நேற்றுமுன்தினம் மாலை முதல் வழமையான ரயில் சேவையில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. சில பிரதேசங்களுக்கான ரயில் போக்குவரத்து திடீரென இடைநிறுத்தப்பட்டது.
நேற்றுக் காலையிலும் சில பயணிகள் ரயில்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடாததன் விளைவாக வழமைக்கு மாறான சனநெரிசல் ரயில்களில் காணப்பட்டது. அதன் விளைவாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடமைக்கு சமுகமளித்திருந்த ஊழியர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதனால் பெரும்பாலான நிறுவனங்கள் கடமைக்கு வருகை தந்திருந்த ஊழியர்களை நேற்று நேரகாலத்தோடு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கின.
இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் ரயில் போக்குவரத்து சேவையில் மாத்திரமல்லாமல் ஏனைய துறைகளிலும் தாக்கங்கள் ஏற்பட்டன. ரயில் போக்குவரத்துத் துறையினர் இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், பெரும்பாலான பயணிகள் தத்தமது தேவையின் நிமித்தம் நேற்றும் வழமை போன்று பயணிக்கவே செய்தனர். அவர்கள் தம் பயணத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களும் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும் அவர்களில் அடங்குவர்.
இவை இவ்வாறிருக்க, பயணிகள் போக்குவரத்து பஸ் கட்டணத்தை விடவும் ரயில் போக்குவரத்து பயண கட்டணமும் குறைவாகும். அத்தோடு பஸ் போக்குவரத்தின் போது முகம்கொடுக்கும் போக்குவரத்து நெரிசலை, ரயில் போக்குவரத்தின் போது எதிர்கொள்ளவும் நேரிடாது. அதன் காரணத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் போது ஏற்படும் அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது ரயில் பயணத்தை மேற்கொள்வதில் அதிகளவிலானோர் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
அதனால் ரயில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போதிலும், சேவையில் ஈடுபடும் ரயில்கள் ஊடாக பயணத்தை மேற்கொள்வதில் அநேக பயணிகள் நேற்றும் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்றுக் காலையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலிலும் கடும் சனநெரிசல் ஏற்பட்டிருந்தது. பயணிகளில் சிலர் ரயிலின் கூரைக்கு மேல் ஏறி பயணத்தை மேற்கொண்டனர். அவர்களில் ராகம ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்ட சிலரும் அடங்குவர். இவ்வாறு ரயிலின் கூரை மேல் பயணித்தவர்களில் ஒருவர் தவறிவிழுந்து ஹொரப்பே பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்திருப்பவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் போக்குவரத்து நெருக்கடியானாலும் ரயில், பஸ் போன்றவற்றின் கூரை மேல் பயணிப்பது எவ்விதத்திலும் பாதுகாப்பானதல்ல. அது ஆபத்தான போக்குவரத்து ஆகும். இவ்வாறான நிலைக்கு பயணிகள் உள்ளாவதற்கு இடமளிக்கப்படவும் கூடாது.
ஆனாலும் இந்நாட்டிலுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் அடைந்து கொள்வதற்காக முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்புக்களில் பெரும்பாலானவை ஈடுசெய்ய முடியாதவை. அவற்றில் இப்பல்கலைக்கழக மாணவரின் மரணமும் அடங்கும்.
ஆனால் எந்தவொரு தொழிற்சங்கமும் தங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் அடைந்து கொள்வதற்காக மக்களைப் பணயம் வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கலாகாது. அதுவே மக்களின் கருத்தாகும். அவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முடியாது.
தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளையும் தேவைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவே நியாயமான அணுகுமுறை. இதைவிடுத்து மக்களைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் நியாயப்படுத்தக் கூடியதல்ல.
இந்நிலையில், போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ரயில் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். உண்மையில் இது வரவேற்கக்கூடியதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான வேண்டுகோளாகும்.
ஆகவே மக்களைப் பாதிக்கவும் நெருக்கடிக்கு உள்ளாக்கவும் செய்யும் வகையில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் அமையலாகாது. அத்தோடு பயணிகளும் தம் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். அவற்றில் எந்தவொரு நெரிசலான சந்தர்ப்பதிலும் பாதுகாப்பற்ற வகையிலான பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.