இங்கிலாந்தின் டர்ஹாம் அணி தனது கெளன்டி சம்பியன்சிப் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்காகவும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் 31 வயதான விஷ்வ பெர்னாண்டோ இன்று ஆரம்பமாகும் வொர்சஸ்டர்செயார் மற்றும் தொடர்ந்து நடைபெறவுள்ள லெய்செடர்செயர் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் டர்ஹாம் அணிக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டர்ஹாம் அணி முன்னேற்றம் காண்பதற்கும் பிரிவு இரண்டுக்கான பட்டத்தை வெல்வதற்கும் எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் ஐந்து புள்ளிகளையே பெற வேண்டி உள்ளது.
எனினும் சசெக்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விஷ்வ பெர்னாண்டோவை இணைக்க டர்ஹாம் அணி முயன்றபோதும் விசா பிரச்சினையால் அவர் இங்கிலாந்து சென்றடைய தாமதம் ஏற்பட்டது.
“இந்த பருவத்தை நாம் வலுவாக நிறைவு செய்வதற்கு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை இணைக்க வேண்டும் என்று நாம் கருதினோம்” என டர்ஹாம் கிரிக்கெட் பணிப்பாளர் மார்கஸ் நோர்த் தெரிவித்துள்ளார்.