இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், ஏனைய மாவட்டங்களிலும் மாலை வேளையிலோ இரவிலோ மழை பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது மழைவீழ்ச்சி ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து கடந்த வரட்சிக் காலத்தில் உலர்ந்தும் வரண்டும் காணப்பட்ட நீர்தேங்கக்கூடிய அனைத்து இடங்களிலும் நீர் தேங்கி இருப்பதை பரவலாக அவதானிக்க முடிகிறது. அத்தோடு வீட்டுச்சூழலிலும் சுற்றாடலிலும் ஒழுங்கு முறையாக அப்புறப்படுத்தாது தேங்கிக் கிடக்கும் கைவிடப்பட்ட திண்மக் கழிவுப்பொருட்களிலும் மழைநீர் தேங்கி இருப்பதையும் பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது.
அவற்றில் சிரட்டை, பிளாஸ்ரிக் பொருட்கள், யோகட் கப்கள், உடைந்த மட்பாண்டங்கள், பொலித்தீன் உறைகள், பொலித்தீன், பூச்சாடிகள், வீடுகளின் கூரைப்பீலிகளில் தேங்கி நிற்கும் கழிவுப்பொருட்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இந்த திண்மக்கழிவுப் பொருட்களையும் கழிவுகளையும் ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்தப்படாததன் விளைவாகவே அவற்றில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
ஆனால் வீட்டுச்சூழலிலும் சுற்றாடலிலும் மழைநீர் தேங்கி நிற்பதற்கு ஏற்ற சூழல் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் அதன் ஊடாகவே நுளம்பு பல்கிப்பெருகி மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது. குறிப்பாக டெங்கு வைரஸை காவிப்பரப்பும் நுளம்பு தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் தற்போதைய மழைக் காலநிலை இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பின்புலத்தில் தான் அண்மைக் காலமாக மழைக் காலநிலையுடன் சேர்த்து டெங்கு வைரஸ் அச்சுறுத்தல் தீவிரமடையக் கூடியதாக இருந்து வருகின்றது.
ஆனால் மழைக்காலநிலை உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்க முடியாதபடி வீட்டுச்சூழலையும் சுற்றாடலையும் சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருந்தால் இவ்வின நுளம்புகள் பெருக வாய்ப்பு இருக்காது. அதன் காரணத்தினால் இது விடயத்தில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதோடு, அதன் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இருப்பினும் இது தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையோடும் நடந்து கொள்வதன் விளைவாக மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கும் சுற்றாடலை இவ்வின நுளம்புகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதன் ஊடாகப் பல்கிப் பெருகி, மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றன.
அந்த வகையில் தற்போதைய மழைக் காலநிலையைத் தொடர்ந்தும் நுளம்புகளின பெருக்கத்தைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இதன் வளர்ச்சியும் பரவுதலும் ஆரோக்கியமானதல்ல. இந்த நிலையில்தான் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரட்ன, மழைக்காலநிலையுடன் டெங்கு வைரஸை காவிப்பரப்பும் நுளம்பு பெருகக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் தெளிந்தநீர் தேங்க முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக வாராவாரம் வெள்ளிக்கிழமை நாட்களின் காலை வேளையில் சுற்றாடலை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆகவே மழைக்காலநிலையுடன் தீவிரமடையக்கூடிய டெங்கு வைரஸின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பது தெளிவாகிறது. அதனால் இவ்வைரஸைக் காவிப் பரப்பக்கூடிய நுளம்புகளின் பெருக்கத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அதுவே இன்றைய தேவையும் கூட. அப்போது டெங்கு வைரஸ் அச்சுறுத்தலாகவே இருக்காது.