Monday, July 15, 2024
Home » Airtel Fastest போட்டியில் தெரிவான தேனுரதனுக்கு LPL அங்கீகாரம்

Airtel Fastest போட்டியில் தெரிவான தேனுரதனுக்கு LPL அங்கீகாரம்

by damith
September 11, 2023 5:19 pm 0 comment

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தமிழ் பேசும் வீரர்கள் தேசிய அணிக்கோ அல்லது கழகங்களிலோ விளையாடினாலும் அவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறிச் செல்வது என்பது மிகவும் கடினமென்றே கூறலாம். அந்த வகையில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஒரு விதிவிலக்கானவர். இருந்தாலும் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு எவ்வளவு தான் திறமை இருந்தாலும் அவர்கள் அந்த இடத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு அவர்களுக்கு ஒரு களம் அவசியம்.

அவ்வாறு ஒரு களத்தை ஏற்படுத்திக் கொள்ள தனி ஒரு வீரருக்கு விளையாட்டில் திறமை மாத்திரம் இருந்தால் போதாது. அவருக்கு ஒரு பின்புலம் அவசியம் தேவைப்படுகிறது. அந்த வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதனுக்கும் அவரது திமைகளை வெளிப்படுத்த ஒரு களம் கிடைத்தது.

அந்தத் களம் தான் Airtel Fastest போட்டி, இந்த போட்டியில் தெரிவாகி தனது திறமைகளை வெளிப்படுத்தியதால் நடந்து முடிந்த LPL போட்டியில் லைக்கா கிங்ஸ் ஜஃப்னா அணிக்காக தேனுரதன் தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது. அது தொடர்பில் அவரிடம் நடத்திய கலந்துரையாடலில்…

கே: உங்களின் சுய விபரம்?

ப:எனது பெயர் ரட்னராஜா தேனூரதன்.மட்டக்களப்பு இருதயபுரத்தில் வசிக்கிறேன். எனது குடும்பம் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி ஆகியோர் ஆவர்.

கே: நீங்கள் ஒரு முழுநேரமாக கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற தீர்மானத்தை எப்போது எடுத்தீர்கள்?

ப: இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான எஞ்சலோ மெத்யூஸ் போல ஒரு சிறந்த வீரராக வர வேண்டுமென்பது எனது கனவு. 2016ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் போது சக அணியின் தலைவர்கள் அனைவரும் அதவாது அவிஸ்க பெர்னாண்டோ, பெத்தும் நிச்சங்க, தமித் டி சில்வா, நவிந்து டிர்மால் அனைவரும் தேசிய அணியில் விளையாடுபவர்கள். அவர்களைப் பார்த்த போது நானும் சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற எனது கனவை நனவாக்க ஆசைப்பட்டேன்.

கே: LPL லைக்கா ஜஃப்னா கிங்ஸில் உங்களது பங்கு என்ன?

ப: 2020இல் நெட் போலராகவே இணைந்து கொண்டேன். அதில் எனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதால் நான் 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற LPL போட்டித் தொடரில் லைக்கா ஜஃப்னா கிங்ஸின் பிரதான கிரிக்கெட் அணியின் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். 2021ஆம் ஆண்டில் அணியின் சகலதுறை ஆட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2023 ஆம் ஆண்டு அதாவது இந்த வருடம் நடைபெற்ற எல்.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் மிதவேக பந்துவீச்சாளராக விளையாடினேன்.

கே: நீங்கள் LPLக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று எப்போது அறிந்து கொண்டீர்கள்?

ப: LPLஇக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. அவர்கள் மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக தெரிவு செய்யப்பட்டனர். அதன் முதல் சுற்றில் என்னுடைய பெயர் தெரிவாகவில்லை. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இரண்டாவது சுற்றுவட்டத்தில் ஏலத்திற்கு வந்த போது லைக்கா ஜஃப்னா கிங்ஸ் எனது பெயரை தெரிவு செய்தது. இதனை இணையத்தளம் ஊடாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கே: நீங்கள் LPLக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிந்து கொண்டவுடன் உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது மற்றும் உங்களது குடும்பத்தினர் அது தொடர்பாக எவ்வாறான  பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர்?

ப: எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. காரணம் நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. முதலில் என்னுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு தொலைபேசி மூலம் இந்த செய்தியை அறிவித்தேன். அப்போது என்னுடைய குடும்ப அங்கத்தினர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். அதன்பின்னர் என்னுடைய சக ஊழியர்களுக்கு கூறினேன். அனைவரும் என்னை வாழ்த்தியதுடன், எதிர்கால வளர்ச்சிக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள்.

கே: LPLக்காக பெற்றுக் கொண்ட பயிற்சி நடவடிக்கைகள்/ விளையாடும் போது உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் என்ன?

ப: குறிப்பாக கூறினால் பயிற்றுவிப்பாளர்கள் சில நுட்பங்களை சொல்லித்தந்தார்கள். உதாரணமாக பந்தை எவ்வாறு வேகமாகவும் நுட்பமாகவும் வீசுவது என்பதை சொல்லித் தந்தார்கள். மேலும் ஒவ்வொரு விதமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு அமைய பந்தை எவ்வாறு வீசுவது என்பதை மிகச் சிறப்பாக சொல்லித் தந்தார்கள். பொதுவாக நான் வேகமாக பந்துவீச மாட்டேன். எனக்கு கிடைத்த பயிற்சி மற்றும் நுட்பங்களால் எனக்கு சிறப்பாக பந்து வீச முடிந்தது.

கே: Airtel Fastest போட்டி குறித்த உங்கள் அனுபவம் மற்றும் அந்த நினைவுகள் குறித்து சில குறிப்புகள்?

ப: இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்காக ஒரு சிறந்த தளத்தை உருவாக்கும் ஒரு நடவடிக்கையை Airtel முன்னெடுத்தது. பல மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற Airtel Fastest போட்டியில் மாவட்ட ரீதியில் மணிக்கு 124 என்ற வேகத்தில் பந்துவீசி இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டேன். அதுவொரு சந்தோஷமான தருணமாக இருந்தது. என்னுடைய திறமைகளை வெளிகொண்டுவந்த ஒரு பிரமாண்டமான ஒரு போட்டி நிகழ்ச்சி என்றே கூறுவேன். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு Airtel Fastestஉம் ஒரு முக்கிய காரணமாகும்.

கே: லசித் மாலிங்க, சமிந்த வாஸ் போன்றவர்களை சந்தித்த போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

ப: Airtel Fastest இன் அடுத்த சுற்றுத் தெரிவுக்காக கொழும்பிற்கு வந்த போது இங்கு சந்தித்த இலங்கை அணிக்காக விளையாடிய சமிந்த வாஸ், லசித் மலிங்க, தில்ஹார பெர்னாண்டோ, அநுர சமரநாயக்க, ஹஷான் திலக்கரத்ன மற்றும் உபுல் சந்தன ஆகியோரை நேரடியாக சந்தித்தது மட்டுமல்ல அவர்கள் நேரடியாக தந்த பயிற்சியும் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அவர்களை போல ஒருநாள் நானும் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் மேலும் மேலும் அதிகமாகியது.

கே: Airtel Fastest போட்டித்தொடர் முழுவதும் நீங்கள் பெற்றுக் கொண்ட ஏதாவதொரு அனுபவம் LPL போட்டித் தொடருக்கு உதவியதா? அது என்ன என்று சொல்ல முடியுமா? அந்த படிப்பினை குறித்து இன்னும் நம்பிக்கை வைத்துள்ளீர்களா?

ப: Airtel Fastest தெரிவுப் போட்டியில் நான் பந்து வீசும் போது என்னை பல்வேறு கோணங்களில் வீடியோ பதிவு செய்தார்கள். அதில் நான் எவ்வாறு பந்து வீச வேண்டும், எந்த முறையில் பந்த வீச வேண்டும் என்பது தொடர்பாக இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான சமிந்தவாஸ் எனக்கு கற்றுக்கொடுத்தார். அந்த முறை எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த பயிற்சியை சிறப்பாக பயன்படுத்துவேன்.

கே: தேசிய அல்லது சர்வதேச மட்டத்திலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விரும்பும் சிறுவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை ?

ப: எந்தத் துறையிலும் சிறந்து விளங்குவது கஷ்டம். ஆனால் முயற்சி செய்தால் அதை கண்டிப்பாக அடைய முடியும். அதுபோல் கிரிக்கெட் விளையாட்டிலும் விளையாட ஆசை இருந்தால் மாத்திரம் போதாது, அதற்கு கடினமான முயற்சியும் தேவை. அத்தோடு கிரிக்கெட் விளையாட்டுக்கான பயிற்சியும் மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் பயிற்சி மற்றும் முயற்சி வீண் என்று நினைக்கலாம், ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் அது ஒருபோதும் வீண் போகாது என்பது என்னுடைய வாழ்க்கை அனுபவம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT