நாட்டில் யாசகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப்போக்குவரத்து சாதனங்களான ரயில், பஸ் உட்பட மதவழிபாட்டு தலங்களின் வாயில்கள் என மக்கள் அதிகளவில் காணப்படும் இடங்களில் யாசகத்தில் ஈடுபடுபவர்களை அதிகளவில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்நாடு கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து யாசகத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
சிறுவர்கள், வளர்ந்தவர்கள் ஆண்கள், பெண்கள், விஷேட தேவையுடையவர்கள், நோயாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்று எல்லா மட்டத்தினரும் இச்செயலில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. சிலர் குடும்பமாக இச்செயலில் ஈடுபடக் கூடியவர்களாக உள்ளனர். அவர்களில் பாடசாலை வயதை உடைய பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள் உள்ளிட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்துவது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
இச்செயலில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் பலவாறு தம் தேவையை வெளிப்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். குறிப்பாக தாம் நோயாளர் என்றும் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தக்கூடிய வசதியற்றவர் என்றும் நோய்க்கு சிகிச்சை பெற பொருளாதார வசதி அற்றவர் என்றும் மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை வாங்குவதற்கு வசதி அற்றவர் என்றும் இச்செயலில் ஈடுபடுபவர்கள் பலவாறு கூறக்கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலர் பாடல்களைப் பாடியபடி யாசகத்தில் ஈடுபடுவதையும் காண முடிகிறன்றது.
இவ்விதமாகப் பலவாறு தம் குறைபாடுகளை வெளிப்படுத்தியபடி யாசகத்தில் ஈடுபடும் இவர்கள், தம் அன்றாட சீவனோபாயத்திற்கான வருமானத்தைத் தேடிக்கொள்வதை நோக்காகக் கொண்டுதான் யாசகத்தில் ஈடுபடுவதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இவ்வாறான எதிர்பார்ப்போடு இச்செயலில் ஈடுபடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் அன்றாட வாழ்வுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர்களும் இச்செயலில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது வங்கிக் கணக்கில் அளவுக்கு அதிகமான பணம் காணப்படுவதாகவும் சொத்துகளைக் கொண்டவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் உண்மையாகவே சீவனோபாயத்திற்கான வருமானத்தை தேடிக்கொள்ளும் நோக்கில் யாசகத்தில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சிலர் வருமானம் ஈட்டிக் கொள்வதற்கான மார்க்கமாக சிலரைப் பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் இச்செயலை நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கின்றனர். இவர்கள் சிறுவர்களை வாடகைக்கு அமர்த்துவதாகவும், இன்னும் சிலர் சிறுவர்களுக்கு போதைமாத்திரைகளை பயன்படுத்தி அவர்களை யாசகத்திற்கு பயன்படுத்துவதாகவும், சிலர் பெண்களை கர்ப்பிணிகள் போன்று போலியாக காண்பிக்கும் வகையில் யாசகத்தில் ஈடுபடுத்துவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யாசகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது பல மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான வசதியைக் கொண்டிருப்பவர்களும் பாடசாலை செல்ல வேண்டிய வயதைக் கொண்டிருப்பவர்களும் இச்செயலில் ஈடுபடுவதால் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் பண ஈட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படும் யாசகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டிலுள்ள யாசகர்கள் குறித்து இம்மாதம் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு சமூக சேவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் யாசகத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் சிறுவர்களும் பெண்களும் அதிகரித்து காணப்படுவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ், உள்ளூராட்சி மன்றங்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடவும் அவ்வமைச்சு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ‘மக்களை ஏமாற்றும் வகையில் பெண்களையும் சிறுவர்களையும் யாசகத்தில் ஈடுபடுத்துவதைத் தடுக்க விஷேட சட்டம் அறிமுகப்படுத்தப்படும்’ என்று இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இ க்கூட்டத்தின் போது மோசடியான யாசக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே யாசகத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து விஷேட கவனம் செலுத்தி உரிய நடவடிககைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக மக்களை ஏமாற்றும் வகையில் இச்செயலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.